News

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு, புனிதமான காவி உடையைத் துஷ்பிரயோகம் செய்து, இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிக்குகளின் கெளரவத்தை அவமதிப்புக்குள்ளாக்கிய பிக்குகளை சாசனத்திலிருந்து நீக்குகிறோம் – இவர்களுக்கு உரிய தண்டனை வழங்க அரச இயந்திரத்திற்கு பூரண உதவிகளை வழங்குவதாக நான்கு மகாநாயக்க தேரர்களும் தெரிவிப்பு

போலி பிக்குகள் மீது நடவடிக்கை – சாசனத்திலிருந்து நீக்கம்
போலி பிக்குகள் மீது நடவடிக்கை – சாசனத்திலிருந்து நீக்கம்




போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, மத மற்றும் சமூக விழுமியங்களுக்கு முரணாகவும் சட்டவிரோதமாகவும் செயற்பட்ட போலி பிக்குகளுக்கு எதிராக உரிய நிக்காயாக்களினூடாக விசாரணை நடத்தி, அவர்களைச் சாசனத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நான்கு மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



இலங்கைச் சமூகத்தில் பிக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாரம்பரிய கௌரவத்தையும் நன்மதிப்பையும், புனிதமான காவி உடை மீது பௌத்தர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த நம்பிக்கையையும் துஷ்பிரயோகம் செய்து இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட அனைத்துப் போலி பிக்குகளுக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



மல்வத்து மகா விகாரை தரப்பின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர், அஸ்கிரி மகா விகாரை தரப்பின் மகாநாயக்க வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர், ஸ்ரீலங்கா அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி தேரர் மற்றும் ஸ்ரீலங்கா ராமஞ்ஞ மகா நிக்காயவின் மகாநாயக்க மகுலேவே விமல தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.



புனிதமான காவி உடையைத் துஷ்பிரயோகம் செய்து, பிக்கு சமுதாயத்தையும் இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிக்குகளின் பாத்திரத்தையும் உலகறிய அவமதிப்புக்கு உள்ளாக்கி, போலி பிக்குகள் குழுவொன்று போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமை மத மற்றும் சமூக விரோதச் செயலாகும் என அந்த அறிக்கையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சமய அடையாளங்களைப் பயன்படுத்தி இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் போலி பிக்குகள் குறித்து விசாரணை நடத்தி, அவர்களைச் சாசனத்திலிருந்து வெளியேற்றுவதற்கான முறையான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது.



இதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அரச இயந்திரம் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



அதற்கமைய, சம்பந்தப்பட்ட நிக்காயக்கள் ஊடாக இந்தச் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிந்து, அவர்களைச் சாசனத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், இளம் பிக்குகளைத் தந்திரமாகவும் திட்டமிட்ட ரீதியிலும் இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுத்தும் போதைப்பொருள் வலையமைப்புகள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எதிராகப் பாதுகாப்புப் படையினர் துரித விசாரணைகளை முன்னெடுத்துச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.



அத்துடன், ஒவ்வொரு இளம் பிக்கு குறித்தும் தொடர்ச்சியான அவதானத்தைச் செலுத்துமாறும், அவர்கள் ஏதேனும் மத விரோதச் செயல்களில் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டால் அது குறித்து ஆராய்ந்து அத்தகைய இளம் பிக்குகளை நல்வழிப்படுத்த அனைத்து ஆச்சார்ய தேரர்களும் (ஆசிரியப் பிக்குகள்) அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



(எம்.ஏ.அமீனுல்லா)

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button