News

பதிவு செய்யப்படாத முஸ்லிம் திருமணம் செல்லுபடியாகும்



*மேல்முறையீட்டு வழக்கில் காதிகள் சபை (Board of Quazis) தீர்ப்பு (25.04.2026)*

18.05.2020 அன்று நடைபெற்ற ஒரு பதிவு செய்யப்படாத முஸ்லிம் திருமணத்தை இரத்துச் செய்யக் கோரிய மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்து அத் திருமணத்தின் செல்லுபடித் தன்மையை உறுதிசெய்து காதிகள் சபை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பு 25 ஏப்ரல் 2026 அன்று கௌரவ எம்.எல்.எம்.எச். மொஹிதீன் ஹுசைன் அவர்களால் வழங்கப்பட்டது. இந்த சபை அமர்வில்  காதிகள் சபையின் உறுப்பினர்கள் என்.எம்.எம். பிஷ்ருல் அமீன் (தலைவர்),  எம்.எல்.எம்.எச். மொஹிதீன் ஹுசைன், எம். ரஃபீக் இஸ்மாயில் மற்றும் எம்.யு. ரிஸ்வான் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

கொழும்பு தெற்கு காதி நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து செய்யப்பட்ட இந்த மேன்முறையீடானது , திருமண பதிவுச் சான்றிதழ் இல்லாதது மற்றும் நிக்காஹ் சடங்கினை நடத்துவதில் குறைபாடுகள் நடந்ததாகக் கூறி அதன் அடிப்படையில் திருமணத்தின் செல்லுபடித் தன்மையை முதன்மையாகக் கேள்விக்குட்படுத்தியது.

இந்த மேல்முறையீட்டை எதிர்த்து சட்டத்தரணி றுடானி ஸாஹிர், உடன் சட்டத்தரணிகளான ஜனீப் ஃபாஸி, ஷிபான் முத்தலிப் மற்றும் நப்றத் நஜ்முதீன் ஆகியோர் முன்னிலையாகி, இஸ்லாமிய சட்டம் மற்றும் நடைமுறையிலுள்ள சட்டபூர்வ தேவைகளுக்கு இணங்க இத் திருமணம் செல்லுபடியாகும்படி நடந்தேறியது என்று வாதிட்டனர்.

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் 16 மற்றும் 17(1) பிரிவுகளின் கீழ் நிக்காஹ்வின் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால் போதுமானது எனவும் திருமணப் பதிவுச் சான்றிதழ் இல்லாதது மட்டுமே ஒரு திருமணத்தைச் செல்லாததாக்காது என்று வாதிட்டனர்.

ஷாஃபி சட்டப்பிரிவின் அடிப்படையில் உள்ள அனைத்து அத்தியாவசிய நிபந்தனைகளும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டன என்றும், அவற்றுள் உள்ளடங்குபவைகளான செல்லுபடியான முன்மொழிவு மற்றும் ஏற்பு (இஜாப் & கபூல்), மஹர் (திருமணக் கொடை) செலுத்துதல், தகுதியான தரப்பினர், சட்டப்பூர்வ வலி, தகுதியான சாட்சிகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சாட்சிகளின் முன்னிலையில் திருமணம் நடத்தப்படுதல் ஆகிய அனைத்து அடிப்படை சட்ட மற்றும் இஸ்லாமிய சட்டத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டன என்றும் சிரேஷ்ட சட்டத்தரணி வலியுறுத்தினார்.

முக்கியமாக, மேல்முறையீட்டாளர் திருமணம் செல்லாது என்ற சட்டப்பூர்வ அடிப்படையில் அல்லாமல் மனைவிக்கு தாபரிப்பு (Maintenance) செலுத்தும் கடமையிலிருந்து தப்பிக்கும் ஒரு தந்திரமான முயற்சியாகவே இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்துள்ளார் என்று கற்றறிந்த சட்டத்தரணி மேலும் சமர்ப்பித்தார்.

MMDA-வின் 16 மற்றும் 17(1) பிரிவுகளின் விரிவான சட்டப் பகுப்பாய்விற்குப் பிறகு, ஒரு செல்லுபடியான திருமணத்தின் அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பதை சபை ஏற்றுக்கொண்டது.

அதன்படி, 18.05.2020 அன்று நடத்தப்பட்ட திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்று சபை அறிவித்து மேன்முறையீட்டு தகுதியின்மை காரணமாக மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.

இலங்கை முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ், ஒரு திருமணத்தின் செல்லுபடியானது வெறும் ஆவணங்களைச் சார்ந்திருக்காமல், நிக்காஹ் சடங்கின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதையே சார்ந்துள்ளது என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, சட்டப்பூர்வமான நிதிப் பொறுப்புகளைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாகத் திருமண ரத்து நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதை நீதிமன்றம் ஏற்க மறுக்கிறது என்பதை இத்தீர்ப்பு மேலும் எடுத்துக்காட்டுகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button