News

“நாம் திருடர்களைப் பிடிப்போம்”  போன்ற பழைய அரசியல் கோசங்கள் இன்று நாட்டுக்கு செல்லுபடியாகாது என ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

“நாம் திருடர்களைப் பிடிப்போம்”  போன்ற பழைய அரசியல் கோசங்கள் இன்று நாட்டுக்கு செல்லுபடியாகாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் நாட்டை முன்னேற்றும் தனது உண்மையான பொருளாதாரக் கொள்கையை நாட்டிற்கு முன்வைக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் தமது எதிர்காலத்தைக் கோஷமிடும் தலைவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி, புத்தர் கூறியது போன்று தமது எதிர்காலத்தைப் பாதிக்கும் விடயங்கள் குறித்து தர்க்க ரீதியாக நோக்கி புத்திசாலித்தனமாக ஆராய்ந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் இன்று (11) நடைபெற்ற அனுராதபுரம் மாவட்ட தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பில் ஏராளமான தொழில் வல்லுநர்கள் மற்றும் வர்த்தகர்கள் கலந்துகொண்டதுடன் அவர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது:

”பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் நாடு நாசமடையும். ரஜரட்ட ராஜ்ஜியம் பலம் வாய்ந்ததாக இருந்தது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால் அந்த இராஜ்ஜியம் வீழ்ந்தது. 2022 இல் அதேநிலை ஏற்பட்டது. மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டது.

நான் தேடிச் செல்லவில்லை. யாரும் இல்லாததால் எனக்குப் பொறுப்பேற்கச் சொன்னார்கள். பொருளாதாரம் இன்றேல் நாட்டில் அரசியல் எதிர்காலம் ஒன்று இருக்காது.

வரலாற்றில் ஒருபோதும் நிகழாதவாறு அனைத்து கட்சிகளையும் இணைத்து செயற்பட்டோம். அதன் பலன் கிடைத்துள்ளது. டொலர் விலை 300 ரூபா வரை குறைந்துள்ளது.

முன்னர், டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி 380 ரூபாவாக இருந்தது.பொருட்களின் விலைகள் இரண்டு மடங்காக இருந்தது. எமது வருமானம் இரண்டு மடங்காக இருக்கவில்லை.

இந்த நிலையில் ஐஎம்எப் இடம் சென்றோம். நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. பணம் அச்சிடுவதும் கடன்பெறுவதும் தடுக்கப்பட்டது. கையையும் காலையும் கட்டி வரவு செலவுத் திட்டத்திற்குத் தேவையான பணத்தை தேட நேரிட்டது.

இந்த நிலையில் நாம் முதற்பணியாக அரச செலவுகளை குறைத்தோம். இரண்டாவது வருடம் நிலைமை சற்று கடினமாக இருந்தது. வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம். வரியை அதிகரித்த போது அனைவரும் எம்மை ஏசினார்கள். 

பொருட்களின் விலை குறைய ஆரம்பித்துள்ளது. நாம் எதிர்பார்க்கும் மட்டத்திற்கு இன்னும் விலைகள் குறையவில்லை. அரச மற்றும் தனியார் முறை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

பொருளாதர ஸ்தீர நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் வீழ்ச்சி ஏற்படலாம். ஓரிரு வருடங்களில் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். உங்கள் எதிர்காலம் என்ன என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் இது. ஸ்தீர நிலையை ஏற்படுத்துவதா அல்லது மீள வீழ்வதா என தீர்மானிக்க வேண்டும்.

திருடர்களை எப்பொழுதும் பிடிக்கலாம். இன்றுள்ள பிரதான பிரச்சினை பொருளாதார ஸ்தீரநிலையாகும். இறக்குமதிக்காக தினமும் கடன்பெற முடியாது. பெற்ற கடனை மீளச் செலுத்த 2042 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. எனவே ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

மொத்தத் தேசிய உற்பத்தி அதிகரித்து வருமானம் உயரும் போது வரிச்சுமையும் குறையும். 24 மணி நேரத்தில் அது நிகழாது. இரண்டு மூன்று வருடங்கள் செல்லும்.

நிவாரணம் வழங்கும் செயற்பாட்டை அடுத்த வருடம் மேற்கொள்ளலாம். உணவு ஏற்றுமதி மேற்கொள்ளலாம். நெல் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும்.

முதலீட்டு வலயங்களை அதிகரிக்க வேண்டும். எண்ணெய் குதங்களை இப்பகுதிக்கு கொண்டு வர உள்ளோம். இப்பகுதி முன்னேற்றப்படும். இதில் தான் எதிர்கால முன்னேற்றம் தங்கியுள்ளது. இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் உருவாக்கப்படும்.

அனைத்தையும் இலவசமாக வழங்குவதாக சஜித் சொல்கிறார். சில நாட்களில் தலைவலியையும் இலவசமாக தருவார்.

அநுர ஏற்றுமதிப் பொருளாதரம் பற்றி பேசினாலும், இறக்குமதி பொருளாதாரம் பற்றி சுனில் ஹந்துன்னெத்தி கூறுகிறார்.

கோசம் எழுப்புபவர்களுக்கு உங்கள் எதிர்காலத்தை ஒப்படைக்காதீர்கள். பொய் செல்பவர்களிடம் ஏமாறாதீர்கள். உண்மை நிலைய ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள்.” என்றும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button