தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைக்க அனைத்து கட்சிகளும் நிபந்தனையின்றி ஆதரவு அளிக்க வேண்டும்மென தமிழக பாரதிய ஜனதாக் கட்சி வேண்டுகோள்
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைக்க அனைத்து கட்சிகளும் நிபந்தனையின்றி ஆதரவு அளிக்க வேண்டும்மென இந்தியாவின் தமிழக பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க) அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வெற்றி பெற்றுள்ள நடிகர் விஜய், அரசியல்வாதியாக ஒரு சிறந்த நிர்வாகியாக செயல்பட குறைந்தபட்சம் ஆறு மாத கால அவகாசத்தை தமிழக அரசியல் கட்சிகள் வழங்க வேண்டும்.
அதன்பின் த.வெ.க ஆட்சியின் செயல்பாடுகளை பொறுத்து ஒவ்வொரு கட்சியும் தங்கள் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு ஏற்ப மக்கள் நலனுக்கு ஏற்ப முடிவு எடுத்து தமிழகத்தில் நாகரிக அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அரசியல் அனுபவம் இல்லாது இருந்தாலும், திரைப்பட நடிகராக அவர் மீதுள்ள தீராத விருப்பத்தின் காரணமாக, கூட்டணி இன்றி போட்டியிட்ட நடிகர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் தமிழகத்தை ஆளும் பொறுப்பை தமிழக மக்கள் அளித்துள்ளனர்.
தனிப்பெரும்பான்மை இல்லாமல் இருந்தாலும், தனிப்பெரும் கட்சியாக த.வெ.க 108 சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற வைத்த தமிழக மக்களின் எண்ணத்திற்கு மரியாதை அளிக்கும் வகையில், தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்கு தலை வணங்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும், சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசும் அரசியல் குதிரை பேரத்திற்கு தமிழக அரசியலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழக வெற்றி கழகம் எந்த வித அழுத்தமும் இன்றி சுதந்திரமாக ஆட்சி அமைக்க, அவர்கள் விரும்பினால் மட்டும் கூட்டணி ஆட்சி அமைக்க, குறைந்தபட்சம் ஆறு மாத காலத்துக்கு ஒன்றிணைந்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை தமிழக மக்களில் ஒருவராக நான் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளராக இது குறித்து பாரதப் பிரதமர் மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பா.ஜ.க தலைவர் நித்தின் நபினுக்கும் கடிதம் எழுத உள்ளேன்.
தமிழக மக்களின் தீர்ப்பை ஏற்கும் வகையில் தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேசிய தலைவர்கள் இதுகுறித்து பேசி, தமிழக வெற்றி கழகம் சுய விருப்பத்துடன் ஆட்சி அமைக்க வேண்டும்.
பிரிவினைவாத சக்திகள் இடம் இருந்து, சுயநல ஊழல் கட்சிகளிடமிருந்து, எந்தவித அழுத்தமும் இல்லாமல், தனித்துவத்துடன் சிறந்த முறையில் தங்கள் பங்கை தமிழக வளர்ச்சிக்கு அளிக்க, அரசியல் வேறுபாடுகளை கடந்து மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை மிகச் சிறப்பாக தமிழகத்தில் செயல்படுத்த இந்த நேரத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி முழு ஆதரவளிக்க முயற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்த உள்ளேன்” என்று கூறியுள்ளார்.



