News

முஜிபுர் ரஹ்மான் பொய் சொல்கிறார் – திறைசேரி அதிகாரியின் மரணம் தொடர்பில் அவரது மனைவி எந்தவொரு பொலிஸ் நிலையத்தில் சரி முறைப்பாடு செய்திருந்தால் அது தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சர் விடுத்த சவால் – சமூக வலைத்தளங்களில் வெளியான ஆவணத்தைச் சமர்பித்ததாக முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு

திறைசேரி அதிகாரியின் மரணம் தொடர்பில் அவரது மனைவி எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் இதுவரை முறைப்பாடளிக்கவில்லை எனவும், அவ்வாறு முறைப்பாடு செய்திருந்தால் அது தொடர்பான ஆவணங்களைச் சபைக்கு சமர்ப்பிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சவால் விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய முஜிபுர் ரஹ்மான் எம்.பி., “திறைசேரி அதிகாரியின் மரணம் தொடர்பில் அவரது மனைவி முறைப்பாடளிக்கவில்லை என நீதியமைச்சர் கூறுவது முற்றிலும் பொய். முறைப்பாடளித்த ஆவணம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது” எனக் குற்றஞ்சாட்டினார்.
இதற்குப் பதிலளிக்கும்போதே ஆக்ரோஷமாகச் சவால் விடுத்த நீதியமைச்சர் மேலும் கூறியதாவது:

“நான் பொய்யுரைக்கவில்லை; முஜிபுர் ரஹ்மானே பொய்யுரைக்கிறார். திறைசேரியின் முன்னாள் அதிகாரியின் மரணம் தொடர்பில் அவரது மனைவி எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் இதுவரை முறைப்பாடளிக்கவில்லை என்பதே உண்மை.

அசேல எனும் செயலாளர் பொய்யுரைக்கிறார்; அவர் தகவல்களைத் திரிபுபடுத்தவே முயற்சிக்கிறார். ஆகவே, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாகக் குறிப்பிடப்படும் ஆவணங்களை முடிந்தால் சபைக்குச் சமர்ப்பிக்குமாறு முஜிபுர் ரஹ்மான் எம்.பி.க்கு நான் சவால் விடுக்கிறேன்.

எந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் குறிப்பிட வேண்டும். இல்லாத ஒரு விடயத்தை இருப்பதாகக் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. முஜிபுர் ரஹ்மான் சபையில் பொய்யுரைக்கிறார். ஒன்று இவருக்குப் படிக்கத் தெரியாமல் இருக்கலாம் அல்லது காது கேட்காமல் இருக்கலாம்” என்றார்.

இதனையடுத்து எழுந்த முஜிபுர் ரஹ்மான் எம்.பி., பொலிஸில் முறைப்பாடளித்ததாகச் சமூக வலைத்தளங்களில் வெளியான ஆவணத்தைச் சபையில் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button