News

தி மு கவுடன் இணைந்து 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ், த.வெ.கவுக்கு ஆட்சியமைக்க ஆதரவளிப்பதற்காக இணைந்து கொள்வதாக அறிவித்தது.

தமிழகத்தில் ஆட்சியமைக்க த.வெ.கவுக்கு காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.



தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றிப்பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் சில கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைக்க முயற்சி செய்து வருகிறது.



தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டும் என விஜய் தன்னிடம் கேட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் கமிட்டியே முடிவு செய்யலாம் என்றும் கூறினார்.



இதனிடையே நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து முடிவு செய்ய சென்னையில் இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



இதன்பின்னர் தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிப்பதாக காங்கிரஸ் தேசிய தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. மதவாத சக்திகளுடன் சேரக்கூடாது என்ற நிபந்தனையுடன் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.



அதேபோல வரும் பாராளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும் அறிவித்துள்ளது.



இதன் மூலமாக தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்த திமுக – காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வருகிறது.



திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் மயிலாடுதுறை, மேலூர், விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர் ஆகிய 5 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button