News

ஈழத்தமிழர்களை போல், தமிழக மக்களும் மத அடையாளங்களைக் கடந்து, மொழி அடையாளத்தை முன்னிறுத்தி ஜோசப் விஜய்யைத் தமது தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர்; ரவூப் ஹக்கீம்

“கிறிஸ்தவரான தந்தை செல்வாவைத் தமது ஒப்பற்ற தலைவராக ஏற்றுக்கொண்டதன் மூலம் ஈழத் தமிழர்கள் உலகிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தனர். அதேபோன்று, தற்போது தமிழக மக்களும் மத அடையாளங்களைக் கடந்து, மொழி அடையாளத்தை முன்னிறுத்தி ஜோசப் விஜய்யைத் தமது தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர்,” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) அன்று நடைபெற்ற ‘மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம்’ மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசியதாவது:

“தமிழகத்தின் முதலமைச்சராகப் பிரபல சினிமா நட்சத்திரமான ஜோசப் விஜய் பதவியேற்கவுள்ளார். எவ்விதத் தயக்கமுமின்றித் தன்னை ஒரு கிறிஸ்தவர் என்று அடையாளப்படுத்தியவர் அவர். இதுவரையில் தன்னை ‘தளபதி விஜய்’ என்று அழைத்து வந்தவர், தற்போது ‘ஜோசப் விஜய்’ என்று தனது சமய அடையாளப் பெயரையும் தயக்கமின்றிப் பயன்படுத்தி, இன்று தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களை வென்றுள்ளார். அவருக்கு எமது கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

சமயம் சார்ந்து தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாகுபாடுகள் இருக்கக்கூடாது; மாறாக, மொழி அடிப்படையில் ஒரே இனமாக நாம் எம்மைப் பெருமையுடன் அடையாளப்படுத்த வேண்டும். திராவிட இயக்கங்களின் வளர்ச்சியின் மூலமே இக்கருத்து வலுப்பெற்றது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

இந்த விடயத்தில் எல்லாவற்றையும் விட முந்திக்கொண்டு, ஈழத் தமிழர்கள் தந்தை செல்வா எனப்படும் தனிப்பெரும் ஆளுமையை, அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதற்காக ஒதுக்கிவிடாமல் தமது ‘தானைத் தலைவராக’ ஏற்றுக்கொண்டனர். எந்த மத அடையாளத்திற்கும் அடிமைப்படாமல், மொழி அடையாளத்தை முன்னிறுத்தி ஒரு தேசிய அடையாளத்திற்கு ஈழத்து மக்களே முதலில் வழியேற்படுத்தினர் என்பது பெருமையுடன் கூறிக்கொள்ளத்தக்க விடயமாகும்,” என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button