தெஹிவளையில் வணிக வளாகத்துக்குள் கூர்மையான ஆயுதங்களுடன் புகுந்த 6 பெண்கள் உள்ளடங்கிய கும்பல், 13 இலட்சம் ரூபா பணத்தை திருடிச்சென்ற சம்பவம்

தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றினுள் கூர்மையான ஆயுதங்களுடன் புகுந்த 6 பெண்கள் உள்ளடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர், அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கி சுமார் 13 இலட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 4ஆம் திகதி மாலை 6.30 மணியளவில், அடையாளம் தெரியாத ஒரு ஆணும் பெண்ணும் குறித்த வணிக வளாகத்துக்குள் நுழைந்துள்ளனர். தாம் ஒரு தொலைக்காட்சியை விலைக்கு வாங்கப் போவதாகக் கூறி, அதற்காக 45 ஆயிரம் ரூபா பணத்தைக் காசாளரிடம் வழங்கியுள்ளனர். ஊழியர்கள் அவர்களுக்குரிய தொலைக்காட்சியைப் பரிசோதித்து தயார்படுத்திக் கொண்டிருந்தபோது, வேண்டுமென்றே தாமதமாவதாகக் கூறி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், தமக்குத் தொலைக்காட்சி வேண்டாம் எனக்கூறி, கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே, அதே ஆணும் பெண்ணும் மேலும் பல ஆண்களையும் பெண்களையும் அழைத்துக்கொண்டு ஆயுதங்களுடன் கடைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இரும்புக் கம்பிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கிய குழுவினர், பையொன்றில் வைக்கப்பட்டிருந்த 13 இலட்சத்து 9 ஆயிரம் ரூபா பணத்தை திருடிதப்பகிச் சென்றுள்ளனர்.
அவர்கள் ரயில் தண்டவாளம் வழியாக நடந்தே தப்பிச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேற்படி சம்பவம் குறித்த வனிக வளாகம் மற்றும் அங்கிருந்த சி.சி.டி.வி கமராக்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


