கண்டியில் இடம்பெறும் நூதன திருட்டு : பொலிஸார் தீவிர விசாரணை – இவரை கண்டால் அறிவிக்கவும்

கண்டி மாவட்டம், அலிமுடுக்கா பகுதியில் உள்ள இரண்டு கைபேசி கடைகளுக்கு வாடிக்கையாளர் போல் நடித்து சென்று, ஒரே நாளில் இரண்டு பெறுமதிமிக்க கைபேசிகளை திருடிச் சென்ற நபர் குறித்து கண்டி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (08) அன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் கைபேசிகளை திருடும் காட்சிகள் அங்குள்ள பாதுகாப்பு கேமராக்களில் (CCTV) மிக தெளிவாக பதிவாகியுள்ளன.
சந்தேக நபர், கைபேசி ஒன்றை கொள்வனவு செய்ய போவதாக கூறி, ஒரே நாளில் குறித்த இரண்டு கடைகளுக்கும் சென்றுள்ளார். அங்கு கடை ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கைபேசிகளை மிக குறுகிய நேரத்தில் திருடிக்கொண்டு, எவருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் தப்பிச் சென்றுள்ளார்.
அலிமுடுக்கா பகுதியில் அடுத்தடுத்து இடம்பெற்ற இந்தத் திருட்டு சம்பவங்கள், அப்பகுதி வர்த்தகர்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் சனிக்கிழமை (09) அன்று கடை உரிமையாளர்களால் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பொலிஸார் கடைகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ காட்சிகளில் உள்ள நபரை அடையாளம் காண முடிந்தாலோ அல்லது இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தாலோ, உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது கண்டி பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



