இலங்கைப் பணமா ? ஆசிய நாடு ஒன்றிலிருந்து ஹேக்கர்களால் திருடப்பட்ட 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை ஓமான் நாட்டு காவல்துறை மீட்டது

ஆசிய நாடு ஒன்றிலிருந்து சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை ஓமான் அரச பொலிஸார் மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தொகையை ஓமானில் உள்ள வங்கி ஒன்றின் ஊடாக அந்நாட்டு நாணயத்திற்கு மாற்ற முயன்றபோது, ஓமான் அரச பொலிஸார் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலமே இந்தப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சைபர் குற்றவாளிகளால் இந்தப் பணம் எந்த ஆசிய நாட்டிலிருந்து திருடப்பட்டது என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை.
எவ்வாறாயினும், அண்மையில் இலங்கையின் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர்களும், தபால் திணைக்களத்திலிருந்து 625,000 டொலர்களும் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனால், ஓமானில் மீட்கப்பட்ட பணத்திற்கும் இலங்கையில் காணாமல் போன பணத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தற்போது அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இலங்கையைத் தவிர வேறு எந்த ஆசிய நாட்டிலிருந்தும் அண்மைக் காலத்தில் இவ்வளவு பெரிய அளவிலான பணம் காணாமல் போனதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது



