News

ஆகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது ; பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

ஆகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கான எரிபொருள் தேவைக்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் ஆறாவது கூட்டம் இன்று (15) கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற போது, அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளதாக அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, வருங்காலத்தில் எரிபொருள் சலுகைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும், தற்போது நடைமுறையிலுள்ள இலக்கத் தகடுகளின் ஒற்றை மற்றும் இரட்டை (Odd-Even) முறையை நீக்கி, QR குறியீட்டின் கீழ் எரிபொருளை வழங்குதல் மற்றும் எரிபொருள் ஒதுக்கீட்டை (Quota) அதிகரிப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

மின்சாரப் பயன்பாட்டை நிலையான முறையில் முகாமைத்துவம் செய்வதை நோக்கமாகக் கொண்டு, ‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தும் வீடுகளைத் தெரிவு செய்து மாணவர்களை மதிப்பீடு செய்தல் மற்றும் மாணவர்கள் ஊடாக மின்சார சேமிப்பு முறைகளை ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

மேலும், எதிர்கால கட்டுமானங்களின் போது ‘பசுமை கட்டிடம்’ (Green Building) எனும் எண்ணக்கருவை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

அரசாங்கம் வலுசக்தித் துறையை முறையாக முகாமைத்துவம் செய்வதன் காரணமாக, மக்கள் தற்போதைய நெருக்கடி குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஏனைய நாடுகளில் எரிபொருள் வரிசைகள் மற்றும் மின்வெட்டு ஏற்பட்ட போதிலும், தமது அரசாங்கம் இந்த நெருக்கடியை சரியாக முகாமைத்துவம் செய்துள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

எனினும், இந்த நெருக்கடி இன்னும் முழுமையாக முடிவுக்கு வராததால், இது குறித்து நாம் தொடர்ச்சியான அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும், நிலையான வலுசக்தி முகாமைத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், எதிர்வரும் வெசாக் வாரத்தில் தடையின்றி மின்சாரத்தை வழங்குவது அவசியம் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button