அரச வங்கியான மக்கள் வங்கி விட்ட பிழை காரணமாக வாடிக்கையாளர்களுக்கு மேலதிக பணம் வழங்கப்பட்டு 656 மில்லியன் ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டது (இது 2023 இல் இருந்து இடம்பெற்றது)

மக்கள் வங்கி தனது பணம் அனுப்பும் முறைமை ஒன்றில் ஏற்பட்ட மாற்று விகிதப் பிழை காரணமாக, சில வாடிக்கையாளர்களுக்கு கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக மேலதிக கொடுப்பனவுகள் கிடைத்துள்ளதாகவும், இதனால் ஏற்பட்ட நிதி பாதிப்பு சுமார் 656 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட பணம் அனுப்பும் முறைமைக்குள் ஒரு நாணயத்திற்கான மாற்று விகிதங்களைப் பயன்படுத்துவதில் இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இது மே 2023 முதல் மார்ச் 2026 வரையிலான பரிவர்த்தனைகளைப் பாதித்துள்ளதாகவும் அந்த அரச வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தவறு அண்மையில் கண்டறியப்பட்டு தற்போது முழுமையாக சரிசெய்யப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
இதனைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, மக்கள் வங்கி உள்வாரி மறுஆய்வைத் தொடங்கியுள்ளதாகவும், செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தியுள்ளதாகவும், அத்துடன் இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
வங்கியின் கூற்றுப்படி, மதிப்பிடப்பட்ட 656 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்கனவே அதன் நிதி அறிக்கைகளில் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் நிதி பாதிப்புகள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் தொடர்பான மீட்பு செயல்முறைகளை மக்கள் வங்கி ஏற்கனவே தொடங்கியுள்ளதுடன், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்து நிதியை மீட்டெடுப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வங்கியின் அன்றாட நடவடிக்கைகள், டிஜிட்டல் சேவைகள் மற்றும் வைப்புத்தொகைகள் இதனால் பாதிக்கப்படாமல் இருக்கும் என வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ள வங்கி, இந்தச் சம்பவம் தனது ஒட்டுமொத்த நிதி ஸ்திரத்தன்மையில் எவ்வித பொருள்ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், சுமார் 3.8 டிரில்லியன் ரூபாய் சொத்துத் தளத்தையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

