News

பெலவத்தை ஜே.வி.பி தலைமைப் பணிமனையில் அமைதியின்மை: அரசாங்கத்தில் மாற்றுக் கட்சியினரை இணைப்பது குறித்து கடும் வாக்குவாதம்

பெலவத்தை பகுதியில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைமைப் பணிமனையில் அண்மையில் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட ஒரு தீர்க்கமான தீர்மானமே இந்த நிலைக்குக் காரணமாக அமைந்திருந்தது.

ஜே.வி.பி அரசியல் குழு உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் முக்கிய பங்காளர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இந்த நெருக்கடி உருவானது. இதன்போது, எதிர்க்கட்சியில் உள்ள எந்தவொரு அரசியல்வாதியையும் அரசாங்கத்திற்குள் இணைத்துக் கொள்ளக் கூடாது என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். எவ்வாறாயினும், தற்போதைய ஆட்சியை ஸ்திரத்தன்மையுடன் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அத்தகைய தரப்பினரை இணைத்துக் கொள்வது அத்தியாவசியமானது என அதற்குப் பதிலளித்த மற்றொரு தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

முக்கிய தலைவர்களின் பங்கேற்பும் கருத்து மோதல்களும்

இந்த விசேட சந்திப்பில் ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, சுனில் வடகல மற்றும் வசந்த சமரசிங்க உள்ளிட்ட முன்னனி அரசியல்வாதிகள் பலர் கலந்துகொண்டதுடன், அங்கு பல்வேறு கருத்துக்கள் “பொதுமக்கள் திசைகாட்டியின் (மாலிமாவ) கொள்கைகளுக்காகவே வாக்களித்துள்ளனர், எனவே அந்தக் கொள்கை மேலும் கடுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும்” என்பதே அங்கு கூடியிருந்த பெரும்பான்மையினரின் நிலைப்பாடாக இருந்தது.

இருப்பினும், அதற்கு மாற்றுக் கருத்தைக் கொண்ட சிறு குழுவினரும் அங்கு இருந்தனர். இந்தக் கருத்து முரண்பாடு இறுதியாகக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் அமைதியற்ற சூழ்நிலை வரை நீடித்தது.

பெரும்பான்மை உடன்பாடும் டில்வின் சில்வாவின் நிலைப்பாடும்

இறுதியில், அரசாங்கத்திற்குள் திசைகாட்டியின் அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என வாதிட்ட தரப்பின் கருத்து பெரும்பான்மை உடன்பாட்டுடன் ஸ்திரப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த எவருக்கும் அரசாங்கத்தில் இடமளிக்கக் கூடாது என்பதில் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தொடர்ந்து உறுதியாக இருந்தார். ஆனால், அன்று கூடியிருந்தவர்களில் பெரும்பான்மையானோர் அவரது அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு இவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் என்றும், கட்சியின் உறுப்பினர்களுக்கு அரச நிர்வாகம் தொடர்பில் நடைமுறை அனுபவம் இல்லை என்றும் ஜே.வி.பியின் பழைய உறுப்பினர்கள் சிலர் அங்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

லால் காந்த மற்றும் டில்வின் சில்வா இடையிலான வாக்குவாதம்

இந்த விவாதங்களுக்கு மத்தியில், திரு. டில்வின் சில்வா அவர்கள் திரு. லால் காந்தவை நோக்கித் திரும்பி, அவரது வீடு தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் கட்சியின் நற்பெயருக்குக் கடுமையான களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த லால் காந்த, “அப்படியென்றால் நீங்கள் செய்யும் காரியங்கள் சரியானவையா?” எனத் திருப்பிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையில், கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் அருகில் இருந்த நாற்காலி ஒன்றை உதைத்ததால் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு, வெளியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளும் உள்ளே வந்து என்ன நடக்கிறது என்று ஆராய்ந்துள்ளனர். எவ்வாறாயினும், இந்த சர்ச்சைக்கரிய சூழ்நிலையில் எவர் மீதும் தனிப்பட்ட ரீதியில் தாக்குதல்கள் எதுவும் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை.

ஞாயிறு லங்கா தீப

Recent Articles

Back to top button