News

மீண்டும் எரிபொருள், எரிவாயு விலைகளை மாற்ற வேண்டி ஏற்படும்.. முழுச் சுமையையும் மக்கள் மீது சுமத்த மாட்டோம்.. அரசாங்கமும் பொறுப்பேற்கும்.. – NPP நாடாளுமன்ற உறுப்பினர்

உலகச் சந்த நிலவரங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளில் சில மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

உலகச் சந்தையில் நிலவும் பாதுகாப்பற்ற தன்மை காரணமாக, எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் ஸ்திரமடையும் வரை இந்த அபாயம் நீடிக்கும் என சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதமாகும் போது எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படும் டாலரின் அளவு சுமார் 5 மில்லியன் டாலர்களால் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது ஏற்படும் மேலதிக செலவுப் சுமையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தாலும், அதன் முழுச் சுமையையும் நுகர்வோர் மீது சுமத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்று அவர் வலியுறுத்தினார்.

அதற்குப் பதிலாக அரசாங்கம், எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் நுகர்வோர் ஆகிய மூன்று தரப்பினரும் இந்தச் செலவுச் சுமையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முறையை தற்போது கையாண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

முக்கிய விபரம்: தற்போதுள்ள விலை நிலவரங்களின் கீழ் கூட அரசாங்கம் மக்களுக்கு பெருமளவு நிவாரணங்களை வழங்கி வருவதாகவும், தற்போது டீசல் லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபாயும், பெட்ரோல் லீட்டர் ஒன்றுக்கு 20 ரூபாயும் திறைசேரியினால் மானியமாகப் பொறுப்பேற்கப்பட்டுள்ளது என்றும் அவர் வெளிப்படுத்தினார்.

எதிர்காலத்தில் சர்வதேச சந்தையில் விலை அதிகரிப்புக்கு ஏற்ப சில விலை திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தாலும், அதன் 100% சுமையையும் பொதுமக்கள் மீது சுமத்துவதைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என சந்தன சூரியஆராச்சி மேலும் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணத் திருத்தம்

மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் போதும் அரசாங்கம் இந்தக் கொள்கையையே பின்பற்றியதாகச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், 0 முதல் 180 அலகுகள் (Units) வரை மின்சாரத்தை நுகரும் நுகர்வோருக்கு 11% மின்சாரக் கட்டண உயர்வு பொருந்தாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையும் நினைவுபடுத்தினார்.

Recent Articles

Back to top button