சிங்கப்பூரை தளமாகக் கொண்ட BMI ஆய்வு தரவுகளின் அறிக்கைப்படி, இலங்கை ரூபா தனது அண்மைக்கால வீழ்ச்சியிலிருந்து 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மீட்சியடையும் என தகவல் வெளியானது

BMI – (Fitch Solutions இன் ஓர் அங்கம்) நிறுவனத்தின் கூற்றுப்படி, உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் குறைவடைவதாலும், மத்திய வங்கி இறுக்கமான பணவியல் கொள்கையைப் பேணுவதாலும், இலங்கை ரூபா தனது அண்மைக்கால வீழ்ச்சியிலிருந்து 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மீட்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணெய் வில வீழ்ச்சியானது இலங்கையின் இறக்குமதிச் செலவு மீதான அழுத்தத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது என்றும், அதேவேளை அதிக வட்டி விகிதங்கள் நாணய ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிக்கும் என்றும் பிஎம்ஐ தெரிவித்துள்ளது.
“மீண்டுமொரு செலுத்தல் சமநிலை (balance-of-payment) நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு, இது நாணயம் கடுமையாக வீழ்ச்சியடையும் அபாயத்தைக் கட்டுப்படுத்துகிறது,” என்று சிங்கப்பூரை தளமாகக் கொண்ட பிஎம்ஐ இன் நாட்டு இடர் ஆய்வாளர் கரோலின் பாங் தெரிவித்தார்.
ஜூன் மாதத்திற்குள் ஈரான் மோதல் முடிவுக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இலங்கை ரூபா ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க டாலருக்கு எதிராக 320 ரூபாவாக மீளெழுச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இது தற்போதைய மட்டத்திலிருந்து 3%-க்கும் அதிகமான லாபத்தைக் குறிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க டாலர்களுக்கான தேவை அதிகரிப்பு, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வெளிநாட்டுத் துறை அழுத்தங்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில், அண்மை வாரங்களாக இலங்கை ரூபா அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
இருப்பினும், மேம்படுத்தப்பட்ட வெளிநாட்டு இருப்புக்கள், முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச கடன் வழங்குநர்களின் தொடர்ச்சியான ஆதரவு ஆகியவை 2022 பொருளாதார நெருக்கடியுடன் ஒப்பிடும்போது மிகவும் பலமான அடித்தளத்தை வழங்குகின்றன என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.



