🇱🇰 🇸🇦
*அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷெய்க் அர்கம் நூராமித் ஸவூதி அரேபிய அதிகாரிகளால் புனித மக்காவில் தடுத்து விசாரிக்கப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும்!

🇸🇦 🇱🇰
*அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷெய்க் அர்கம் நூராமித் ஸவூதி அரேபிய அதிகாரிகளால் புனித மக்காவில் தடுத்து விசாரிக்கப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும்!*
ஷெய்க் அர்கம் நூராமித் தற்போது புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காகவும் குறிப்பிட்ட ஒரு தனியார் ஹஜ் முகவர் குழுவின் வழிகாட்டியகவும் புனித மக்கமா நகர் சென்றுள்ள நிலையில் மினா மைதானத்தில் இருந்து ஸவூதி அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
முஸ்லிம் சமய கலாசார விவகார அமைச்சின் இஸ்லாமிய நூல்கள் மீளாய்வு குழு உறுப்பினர் என்ற வகையில் ஸவூதி அரேபியாவில் இருந்து தருவிக்கப்பட்ட சில நூல்களும் தர்ஜுமதுல் குர்ஆன் பிரதிகளும் இலங்கை சுங்கத்தினால் விடுவிக்கப்படாமைக்கு அவரே பிரதான சூத்திரதாரி என்றும்..
அவர் வழிகெட்ட அகீதாவை கொண்டவர் என்றும், ஸுபிஸ முகாமைச் சேர்ந்த பிரதானி என்றும், தனது வழிகெட்ட அகீதாவை ஹஜ் யாத்திரிகர்கள் மத்தியில் பரப்புரை செய்வதற்காக மக்கா வந்திருப்பதாகவும் ஸவூதி குடியுரிமை பெற்ற இலங்கையர் ஒருவர் மேற்கொண்ட முறையீட்டின் படியே மேற்படி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியவருகிறது.
முறையீட்டாளர் தான் மக்காவில் உள்ள இலங்கை ஹஜ்ஜாஜிகள் நலன்புரி அமைப்பின அறங்காவலர் என்றும், சவூதி அதிகாரிகளுடனும் இலங்கை அதிகாரிகளுடன் ஒத்துழைப்பவர் என்றும் தான் இலங்கை தூதரகம், இலங்கை கொன்ஸல் ஜெனரல் காரியாலயம், இலங்கை முஸ்லிம் சமய கலாசார விவகார திணைக்களத்தின் அனுமதி உடனேயே மேற்படி நூல்களை அனுப்பி வைத்ததாகவும் தனது முறையீட்டில் தெரிவித்துள்ளார்.
இங்கு ஷெய்க் அர்கம் ஒரு தனியாளாகவோ, அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் பிரதிநிதியாகவோ, அல்லது ஒரு ஹஜ் முகவர் நிலைய வழிகாட்டியாகவோ அன்றி இலங்கை அரசின் ஆலோசனை சபை உறுப்பினராகவே தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார், அது பிரிதொரு நாட்டின் உள் விவகாரத்தில் ஸவூதி அதிகாரிகள் மேற் கொண்ட அப்பட்டமான தலையீடு ஆகும்.
அந்த வகையில் இலங்கை வெளிவிவகார அமைச்சு இலங்கைக்கான ஸவூதி தூதுவரை அழைத்து அரசின் பலத்த ஆட்சேபனையை தெரிவிப்பதோடு மேற்படி சம்பவம் குறித்து பூரண விசாரணைகளை முன்னெடுத்து ஷெய்க் அர்கம் நூராமீத் அவர்களுக்கு நீதியையும் இழப்பீட்டையும் பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
ஸவூதி அரசின் சம்மந்தப்பட்ட தரப்புகள் அவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும், அவர் ஸவூதி அரேபியாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்குமாறும் மேற்படி முறைப்பாட்டாளர் தனது முறையீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்பு மாநாட்டின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டு இலங்கையருக்காக தரப்படும் 3500 ஹஜ் யாத்திரிகர்களுக்கான கோட்டாவில் ஹஜ் விசாவில் புனித ஹஜ்கடமையை நிறைவேற்ற சென்ற அவரை குறிப்பிட்ட முறையீட்டின் உள்ளடக்கத்தின் படி தடுத்து விசாரிக்க ஸவூதி அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது என்பதே இயற்கை நியதி (மற்றும் சர்வதேச சட்டங்களின் படி) நீதியாகும்.
மேற்படி முறைப்பாடு, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த பூரணமான அறிக்கையை சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத் மற்றும் கொன்ஸல் ஜெனரல் முன்னாள் மேல்நீதிமன்ற நீதியரசர் ழஃபர் தாஹீர் ஆகியோர் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பி வைப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
ஷெய்க் அர்கம் நூராமீத் அவர்களுக்கு தேவைப்படும் சட்ட உதவிகளை வாங்குமாறு இலங்கை முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கத்தை கேட்டுக் கொள்வதோடு, அவருக்கு தேவையான சகல அரச யந்திர ஒத்துழைப்பை பெற்றுத்தருமாரு சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் விணயமாக கேட்டுக் கொள்கிறோம்!
*மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்*
ஸவூதி அரேபிய ஜித்தா நகரிற்கான முன்னாள் கொன்ஸல் ஜெனரல்.
முன்னாள் பொதுச் செயலாளர் தேசிய ஷூரா சபை
✍️ 30.05.2026



