NPP க்கு ஆதரவு கொடுத்த சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் 5 உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்

புலத்சிங்கள பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய 5 உறுப்பினர்களை அவர்களது பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இவ்வாறு உறுப்பினர் பதவிகளை இழந்தவர்கள், அந்தப் பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய ஐமச குழுவின் தலைவர் நிஹால் மெந்திஸ், மொஹமட் நிஷார்ட், காந்தி பெலவத்த, ஆயிஷா சாமலி மற்றும் புஷ்பா சமரசிங்க ஆகியோராவர்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர், பிரதேச சபையின் ஆட்சியை அமைப்பதற்காக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்து, இந்த உறுப்பினர்கள் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் அடங்கிய ஆதாரத்தை அப்பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் சமர்ப்பித்ததை அடுத்து, கட்சியின் செயற்குழு இந்த உறுப்பினர்களை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கட்சியிலிருந்து நீக்க தீர்மானித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான, தான் இது குறித்து கட்சிக்கு தொடர்ச்சியாக முறைப்பாடு செய்ததாகவும், குறித்த உறுப்பினர்கள் கட்சியின் முடிவுக்கு முரணாக தொடர்ந்து செயற்பட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
“கூட்டு எதிர்க்கட்சியாக எங்களுக்கு 16 உறுப்பினர்கள் இருந்தனர். சுயேச்சைக் குழு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எங்களது 6 பேருடன் சேர்த்து எங்களிடம் 16 பேர் இருந்தனர். தேசிய மக்கள் சக்திக்கு 9 பேரே இருந்தனர். அவர்கள் பணம் மற்றும் இலஞ்சம் கொடுத்து எங்களது 5 உறுப்பினர்களை விலைக்கு வாங்கினர்.
இவர்கள் இதனைச் செய்வார்கள் என்று நான் தொடர்ந்து முறைப்பாடு செய்து வந்தேன். அதற்கு ஒரு நல்ல ஆதாரம் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பிரபல பௌத்த துறவி மூலம் கிடைத்தது. அவர் எப்படியோ அந்த ஒலிப்பதிவை பெற்று எங்கள் தலைவரிடமும், பொதுச் செயலாளரிடமும் சமர்ப்பித்தார். அதன் பின்னரே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் இது செயற்குழுவிற்கும், சட்டத்தரணிகள் குழுவிற்கும் அனுப்பப்பட்டது, நானும் இதில் தலையிட்டேன். அதன்படி ஐந்து பேரும் இன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். ஏனெனில் கடந்த மாதக் கூட்டத்திலும் கூட, மாலிமாவினால் கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு சட்டமூலத்திற்கும் இவர்கள் கைகளை உயர்த்தினர். இதுவரையில் அவர்கள் அதற்கு எதிராகச் செயல்படவில்லை. எமது கட்சியின் கொள்கைக்கு எதிராகவே இவர்கள் செயற்பட்டனர். அவர்களுக்கு நல்லதொரு தண்டனை கிடைத்துள்ளது. அடுத்ததாக பட்டியலில் உள்ளவர்கள் சட்டப்பூர்வமான முறையில் அந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.”


