எனது கணவர் அப்பாவி என்பது எல்லாருக்கும் தெரியும்… இருந்தும் அவருக்கு அதிகமான சித்திரவதைகள் கொடுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டு வருகிறது ; சுரேஷ் சலேவின் மனைவி அழுகையுடன் தெரிவிப்பு

எனது கணவர் அப்பாவி என்பது அனைவருக்கும் தெரியும். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் செயற்பாடுகள் அநீதியானது. அவரை ஒரு பலிக்கடாவாக ஆக்கியிருப்பது அனைவருக்கும் தெரிகின்றதென அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவின் மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார்.
முதல் தடவையாக நேற்று (06) சி.ஐ.டிக்கு வந்த நிலையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு அதிகமான சித்திரவதைகள் கொடுக்கப்பட்டுள்ளதாக ஜே.எம்.ஓ அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் சாகும் வரையான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். அதை எவ்வாறாயினும் அதை நிறுத்த அவர் விரும்பவில்லை.
நாங்கள் அவரது மனதை மாற்ற முடியுமா என்று பலமுறை பேசிப் பார்த்தோம். ஆனால், அவர் பயங்கரவாத சட்டத்திற்கு எதிராகவே இதைச் செய்வதாகக் கூறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தனது கணவர் தற்போது சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக 38 வருடங்கள் சேவையாற்றிய ஒருவருக்கு இவ்வாறு நடப்பது அநீதியானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனோரி சலே வலியுறுத்தியுள்ளார்


