News

உலக சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையிலும் அரசின் தலையீட்டில் சதோசவில் நாளை (10) முதல் அரசி, சீனி, மாவு, பருப்பு உள்ளிட்ட 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகிறது

உலக சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையிலும், உள்நாட்டு நுகர்வோருக்குப் பெரும் நிவாரணம் வழங்கும் நோக்கில் புதன்கிழமை (10)  முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க லங்கா சதோச நிறுவனம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் விசேட தலையீட்டின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் யுத்த மோதல்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மையால், உலகளவில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் சடுதியாக அதிகரித்து வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியிலேயே அரசாங்கம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

இது குறித்து வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்:

“இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் சர்வதேச சந்தையில் கடுமையாக அதிகரித்துள்ள போதிலும், பொதுமக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் தனது அரச இயந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தி வருகிறது. நுகர்வோரின் சுமையைக் குறைக்கும் நோக்கில், லங்கா சத்தோசவின் நாடு தழுவிய சில்லறை விற்பனை நெட்வொர்க் ஊடாக அரசாங்கம் இந்த விலைக்குறைப்புத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.” என்றார்.

அமைச்சரின் கூற்றுப்படி, லங்கா சத்தோச நிறுவனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தலைமையிலான பணிப்பாளர் சபை மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் இணைந்து, சத்தோச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கான அவசியமான முடிவுகளை எடுத்துள்ளனர்.

நாளை முதல் அமலுக்கு வரும் இந்த திருத்தப்பட்ட புதிய விலைகள், கொழும்பு – புறக்கோட்டை (Pettah) சந்தையில் தற்போது நிலவும் மொத்த வியாபார விலைகளை விடவும் குறைவாக இருக்கும் என அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரிய வெங்காயம், வெள்ளைச் சீனி, பருப்பு, தட்டைப்பயறு, கடலை, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கோதுமை மா, சிவப்பு பச்சரிசி, சிவப்பு நாட்டரிசி, சம்பா அரிசி, வெள்ளை நாட்டரிசி, பொன்னி சம்பா உள்ளிட்ட 18 வகையான பொருட்கள் இந்த விலைக்குறைப்புப் பட்டியலில் அடங்குவதாக தெரியவருகிறது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button