News

அரசாங்கம் எடுக்கும் இழிவான முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் ; சஜித்

அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நீதித்துறையின் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட மரண அடியாகும் என்றார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசாங்கம் ஜனநாயகத்தை மதிக்காது, நீதித்துறையின் சுதந்திரத்திற்கு எதிராகச் செயற்படுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
நாட்டில் இன்று ஜனநாயகம் அற்ற தனிக்கட்சி ஆட்சியே காணப்படுவதாகவும், இது சர்வாதிகாரத்தை வலுப்படுத்தும் செயல் எனவும் அவர் சாடினார். நீதித்துறையின் ஸ்திரத்தன்மைக்கும் மக்களின் இறையாண்மைக்கும் அரசாங்கம் நேரடியாகத் தலையீடு செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

எந்தவொரு விஞ்ஞானபூர்வமான முறையுமின்றி, தனிநபர் அல்லது ஒரு குழுவின் தேவைக்காக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்க அரசாங்கம் முயற்சிப்பது ஆபத்தானது. இச்செயற்பாட்டிற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் ஏற்கனவே தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள 8 நீதிபதி வெற்றிடங்களை கடந்த 6 மாதங்களாக நிரப்பாமல் இருப்பது, நீதித்துறையில் தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகிப்பதாகும். சிரேஷ்டத்துவத்தைப் புறக்கணித்துச் செய்யப்படும் இத்தகைய செயற்பாடுகள், நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைச் சீர்குலைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நீதித்துறை தொடர்பில் அவசர விவாதத்தை நடத்துவதற்காக எதிர்க்கட்சி முன்வைத்த கோரிக்கையை, சபாநாயகர் ஜனநாயகத்திற்குப் புறம்பாக தன்னிச்சையாக நிராகரித்ததை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்.
“அரசியலமைப்புக்கு எதிராக நீதித்துறையின் மீது செல்வாக்கு செலுத்தவும், அதன் சுதந்திரத்தைப் பாதிக்கவும் அரசாங்கம் எடுக்கும் இழிவான முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button