அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் 149 போக்குவரத்து குற்றங்கள்; 32 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் – விதி மீறல்களுக்கு எதிராக தொடரும் கடும் நடவடிக்கை

நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்று வரும் தொடர் போக்குவரத்து சட்ட அமுலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் 27 ஆம் திகதி மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை விசேட போக்குவரத்து சோதனை மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வீதிவிபத்துகளை குறைத்தல், போக்குவரத்து சட்ட மீறல்களைத் தடுப்பது மற்றும் பொறுப்புணர்வுடன் சட்டத்தை மதிக்கும் சாரதிகளை உருவாக்குவது ஆகிய நோக்கங்களுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொத்துவில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில், அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட 49 பொலிஸ் அதிகாரிகள் இந்த விசேட நடவடிக்கையில் பங்கேற்றனர். நடவடிக்கைகள் முழுவதும் மூத்த பொலிஸ் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பும் இடம்பெற்றது.
நடவடிக்கையின் பெறுபேறுகளாக அபாயகரமான முறையில் வாகனம் செலுத்தியமை தொடர்பாக 17 வழக்குகளும், போக்குவரத்து சட்டங்களை மீறியமை தொடர்பாக 4 வழக்குகளும், செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய 23 பேர் மீது வழக்குகளும், பாதுகாப்பு தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய 76 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைளும், 32 மோட்டார் சைக்கிள்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டன. மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
இலங்கையின் ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்படும் போக்குவரத்து சட்டங்கள் இப்பிரதேசத்திலும் எந்தவித விதிவிலக்கும் இன்றி சமமாக அமுல்படுத்தப்படும் என்றும், சட்டத்தை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் பொறுப்பற்ற மற்றும் அபாயகரமான வாகன ஓட்டத்தால் பல இளைஞர்கள் உயிரிழந்துள்ளமை கவலைக்கிடமானதாக இருப்பதால், இதுபோன்ற விசேட போக்குவரத்து சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சட்டத்தை மதிக்கும் பெரும்பாலான முஸ்லிம் பொதுமக்கள் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளதுடன், அண்மைய மாதங்களில் போக்குவரத்து சட்டங்களைப் பின்பற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
“மனித உயிரின் மதிப்பை அளவிட முடியாது. போக்குவரத்து சட்டங்களை மதிப்போம்; அனைவருக்கும் பாதுகாப்பான வீதிகளை உருவாக்குவோம்” என்ற செய்தியையும் பொலிஸார் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
UMAR LEBBE NOORUL HUTHA UMAR

