News

இந்த அரசாங்கம் வழங்கிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை – Gas விலை 5,200 ரூபாய் ஆகியுள்ளது – ஆகவே எதிர்வரும் 2029 ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சிந்தித்து முடிவெடுத்து சஜித்துக்கு வாக்களியுங்கள்

நெல்லுக்கு விலை இல்லை; வாழ்வுக்கு வழி இல்லை – விவசாயிகளின் வேதனை”.

பாறுக் ஷிஹான்

நாட்டு மக்களுக்கு கடந்த பொதுத் தேர்தலின் போது வழங்கப்பட்ட வரிவிலக்கு மற்றும் பல்வேறு நிவாரண வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதியின் அமைப்பாளரும்,   சம்மாந்துறை பிரதேச சபையின்  உபதவிசாளருமான  வெள்ளையன் வினோகாந் தெரிவித்தார்.

புதிய வளத்தாப்பிட்டியிலுள்ள அவரது காரியாலயத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தற்போதைய விலைவாசி உயர்வு பொதுமக்களின் வாழ்க்கையை கடுமையாகப் பாதித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்களை வாங்கச் செல்லும் பெற்றோர்கள் கூட பொருட்களின் விலையைக் கண்டு அதிர்ச்சியடையும் நிலை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதாக தேர்தலுக்கு முன்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படாமல், மாறாக பலமுறை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் 2,900 ரூபாயிலிருந்து 5,200 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும், எரிபொருள் விநியோகத்தில் தொடரும் சிக்கல்கள் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறினார்.

அம்பாறை மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கருத்து வெளியிட்ட அவர், போதிய அறுவடை கிடைத்த போதிலும் நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்காததால் விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகத் தெரிவித்தார். பலர் தமது நெல்லை விற்பனை செய்ய முடியாமல் களஞ்சியங்களில் தேக்கி வைத்திருப்பதாகவும் கூறினார்.

மேலும், போக்குவரத்துக் கட்டண உயர்வு மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும், பல தொழில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் விளைவாக வேலைவாய்ப்புகளை இழந்த இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் தேர்தலுக்கு முன்பு வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்னெடுத்துள்ள வீடமைப்பு மற்றும் சமூக நலத்திட்டங்களை நினைவுகூர்ந்த அவர், வரவிருக்கும் 2029 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் சிந்தித்து முடிவெடுத்து, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை உணர்ந்து செயற்படக்கூடிய தலைமைத்துவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்



Thanks & Best Regards,

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button