நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் அதிகாரிகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு – 50 பேர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் கைதிகளுக்கிடையே வெடித்த மோதல், இன்று (06) காலை பெரும் வன்முறையாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், இன்றைய மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் உட்பட இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேற்று மதியம் 1 மணியளவில் விளக்கமறியல் கைதிகள் குழுவிற்கும், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையே இந்தத் தொடர் மோதல்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
நேற்றைய மோதலில் இருவர் உயிரிழந்து, 38 பேர் காயமடைந்திருந்த நிலையில், இன்று காலை மீண்டும் வெடித்த வன்முறையில் மேலதிகமாக 50 கைதிகள் காயமடைந்து அவசர சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை அதிகாரிகளால் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த சிறைச்சாலையின் சூழல், இன்று காலை மீண்டும் சீர்குலைந்து பதற்றமடைந்தது. வன்முறையைக் கட்டுப்படுத்தவும், அசாதாரண சூழலைச் சமநிலைப்படுத்தவும் சிறைச்சாலை வளாகத்திற்குள் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டனர்.
தற்போது சிறைச்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு வன்முறையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



