News

நிந்தவூரில் குப்பைகள் ,கழிவுப்பொருட்களை கொட்டுபவர்கள் இனிமேல் கவனம்… ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

நிந்தவூரில் சட்டவிரோத குப்பை கொட்டலுக்கு கடும் நடவடிக்கை: இரகசிய கண்காணிப்பு கமராக்கள் பொருத்தம்

நூருல் ஹுதா உமர்

நிந்தவூர் எம்.எச்.எம். அஷ்ரப் சதுக்கம் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் கொட்டப்படுவதைத் தடுக்கும் நோக்கில் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிந்தவூர் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் குப்பைகள் கொட்ட வேண்டாம் என பலமுறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்ட போதிலும், சிலர் தொடர்ச்சியாக அநாமதேயமாக குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்களை கொட்டி வருவதாக பிரதேச சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், பொதுச் சுகாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதோடு, பிரதேசத்தின் அழகும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, எம்.எச்.எம். அஷ்ரப் சதுக்கம் மற்றும் பிரதேச சபை வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் எந்தவிதமான குப்பைகளையும் அல்லது கழிவுப்பொருட்களையும் கொட்டுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சபை அறிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்களது வீட்டு மற்றும் சிறியளவிலான கழிவுப்பொருட்களை நிந்தவூர் பொதுச் சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தினசரி கழிவகற்றல் பெட்டியில் மட்டுமே ஒழுங்காகவும் பொறுப்புடனும் அகற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டுபவர்களை அடையாளம் காணும் நோக்கில் குறித்த பகுதிகளில் இரகசிய கண்காணிப்பு கமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டு தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விதிமுறைகளை மீறி குப்பைகள் கொட்டுபவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடைமுறையில் உள்ள சட்டங்களின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிந்தவூர் பிரதேச சபை எச்சரித்துள்ளது.

பொதுமக்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொது பொறுப்புணர்வுடன் செயற்பட்டு, தூய்மையான நிந்தவூரை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பிரதேச சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button