மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தால் தினசரி 6, 7 மில்லியன் ரூபாய் நஷ்டம் – ஆண்டுதோறும் 4 பில்லியன் ரூபாய் நஷ்டம்
மத்தள சர்வதேச விமான நிலையம் தினசரி 6–7 மில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும், இது ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 4 பில்லியன் ரூபாயாக அதிகரிப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் தெரிவிக்கப்பட்டது.
நேற்று (15) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது, இந்த நிலைமையைக் கையாள்வதற்கான முதலீட்டு முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதாகவும், இந்த செயல்முறை 2027 ஆம் ஆண்டளவில் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
2026 ஆம் ஆண்டிற்கான துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் முன்னேற்றம் மற்றும் 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்து நடைபெற்ற கூட்டத்தின் போதே இத்தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.
மதிப்பாய்விற்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்களில் இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA), விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுவனம் (AASL), சிலோன் ஷிப்பிங் கோப்பரேஷன், ஸ்ரீலங்கன் ஏயார்லைன்சு, ஸ்ரீலங்கன் கெட்டரிங், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை, வணிகக் கப்பல் செயலகம், துறைமுக மேலாண்மை மற்றும் ஆலோசனைச் சேவைகள் மற்றும் ஜெயா கொள்கலன் முனையங்கள் (JCT) ஆகியவை அடங்கும்.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கை துறைமுக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முக்கிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.
காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைத்தல், கொழும்பு துறைமுகத்தில் முன்மொழியப்பட்டுள்ள லாஜிஸ்டிக்ஸ் பூங்கா, தெற்கு அலைதாங்கியின் விரிவாக்கம், மேற்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் துறைமுக நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை இதில் அடங்கும்.
விமானப் போக்குவரத்து தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) மேம்படுத்துவதற்கான நீண்ட காலத் திட்டம் அடுத்த 30 ஆண்டுகளில் தேசிய விமானப் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், பயணிகள் கையாளும் திறன் 2055 ஆம் ஆண்டளவில் 24.2 மில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2027 ஆம் ஆண்டில் நிறைவடைய உள்ள BIA அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், வருகை மற்றும் புறப்பாடு முனையங்களின் விரிவாக்கம், புதிய முனையக் கட்டிடக் கட்டுமானம் மற்றும் டிப்போ மேம்பாடுகள் ஆகியவை அடங்கும். விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
விமான நிலைய சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கு டிஜிட்டல் விவகார அமைச்சுடன் இணைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இங்குரக்கொடை உள்ளிட்ட உள்நாட்டு விமான நிலையங்களின் அபிவிருத்திப் பணிகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதுடன், சிவில் பயணிகள் நடவடிக்கைகளுக்காக இலங்கை விமானப்படையுடன் மிகவும் திறம்பட ஒருங்கிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் மற்றும் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் இதன்போது தெரியவந்தது.
அனைத்து நிறுவனங்களும் தங்களது நிதி ஆதாரங்களை திறம்பட நிர்வகிக்க வேண்டும் என்றும், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் வரி செலுத்துவோருக்கு சுமையை ஏற்படுத்தாமல் அரச திறைசேரிக்கு பங்களிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி திஸாநாயக்க வலியுறுத்தினார்.



