வீடொன்றில் புகுந்து இளம் பெண் ஒருவரை தாக்கி பொருட்களையும் சேதமாக்கி தப்பிச்சென்றவர்கள் மீது பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுத்து துப்பாக்கி சூடு நடத்தியதில் 24 வயது நபர் படுகாயம்

பிலியந்தல, வீரசிங்க மாவத்தை பகுதியில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முழுமையாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிலியந்தலை, போகுந்தர பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரியை தாக்க முற்பட்ட சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
முன்னதாக, பொரலெஸ்கமுவ, ஓ.பி. பெரேரா மாவத்தையிலுள்ள வீடொன்றுக்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் கூர்மையான ஆயுதங்களுடன் வந்த நால்வர், அங்கிருந்தவர்களைத் தாக்கி வீட்டிற்கும் சேதம் விளைவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, சந்தேகநபர்கள் பிலியந்தலை நோக்கித் தப்பிச் செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போகுந்தர, வீரசிங்க மாவத்தை பகுதியில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தப்பிச் சென்ற சந்தேகநபர்களில் இருவர் பொலிஸாரைக் கண்டு மோட்டார் சைக்கிளைத் திருப்பி தப்பிக்க முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்த பொலிஸார் முயன்றபோது, மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நபர், தன்னிடம் இருந்த கூர்மையான ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரியொருவரைத் தாக்கியுள்ளார்.
இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக பொலிஸ் அதிகாரியை மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில், சந்தேகநபரின் இடுப்புப் பகுதியில் குண்டு பாய்ந்ததில் அவர் கீழே விழுந்துள்ளார்.
சம்பவ இடத்திலேயே காயமடைந்த 24 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய மற்றைய நபர் தப்பிச் சென்றுள்ளார்.
காயமடைந்த பொலிஸ் அதிகாரியும், சந்தேகநபரும் தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தாக்குதலுக்குள்ளான வீட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை மற்றும் பொரலெஸ்கமுவ பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்



