News

சி. டி விக்ரமரத்னவின் உயிரிழப்பை தாங்க முடியாமல் மிகக் கவலையாக உள்ளது – அண்மையில் சந்தித்த போது கூட , “சேர் உங்களின் வீட்டுக்கு வர வேண்டும்” என்றுகூட தெரிவித்தார் ; மைத்திரி

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உயிரிழப்பு இவ்வாறு அமைந்துவிட்டது என்பதை நினைக்கும்போதே கவலையாக இருக்கிறது. 

இரு வாரங்களுக்கு முன்னர் சந்தித்து பேசியிருந்த நிலையில் இப்படியொரு சம்பவம் இடம்பெற்றதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’’ என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவலை வெளியிட்டார்.



உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.



இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,



‘‘முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன எனக்கு மிகவும் நெருக்கமானவர். நான் ஜனாதிபதி பதவியிலிருந்தபோது அவர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். மிகவும் நேர்மையான, வெளிப்படையான, நல்ல குணத்துடன் கடமையுணர்ச்சியுடன் செயற்பட்டவர்.



பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகள், மோதல்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான நிலைப்பாட்டு மோதல்களால் பொலிஸ் மா அதிபருக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதுண்டு. இருந்தபோதும் அவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் எவரையும் பகைத்துக்கொள்ளாமல் செயற்பட்டார். ஆர்ப்பாட்டக்காலத்திலும் கூட மிக அமைதியாகவே செயற்பட்டார்.



இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் நானும் அவரும் எனது நண்பரொருவரும் சந்தித்தோம். இரண்டு மணிநேரத்துக்கு மேல் நகைச்சுவையாகவே பேசிக் கொண்டிருந்தோம். நான் புறப்பட சிறிது நேரத்துக்கு முன்பு, “சேர் உங்களின் வீட்டுக்கும் வர வேண்டும்” என்றுகூட தெரிவித்தார்.



அரசியலுக்கு அப்பால் சமய, தேசிய பிரச்சினைகள் குறித்து பேசியிருந்தோம். அவ்வாறிருக்கையில், அவரின் இறப்பு இவ்வாறு அமைந்துவிட்டது என்பதை நினைக்கும்போதே கவலையாக இருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்னர் சந்தித்து பேசியிருந்த நிலையில் இப்படியொரு சம்பவம் இடம்பெற்றதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.



இந்தச் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை கூற முடியாது. விசாரணைகளினூடாகவே புரியும். அதனால், இதுபோன்று பெறுமதிமிக்க அதிகாரிகளை பொலிஸ் மட்டுமல்ல ஏனைய சேவைப்பிரிவுகளுக்கும் மிகவும் முன்மாதிரியான கதாபாத்திரம் அவர். இவரை போன்றவர்கள் நாட்டுக்கு அவசியமானவர்கள்’’ என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button