அடுத்த 25 ஆண்டுகளுக்கு அனுராவுக்கு போட்டியாக யாரும் இல்லை.. அப்படி போட்டியிட வேண்டும் என்றால் என்னை போன்ற ஒரு குழு தேவலோகத்திலிருந்துதான் இறங்கி வர வேண்டும்..

கடந்த தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் தோற்கடிக்கப்பட்டதாகவும், அவர்களின் எஞ்சியுள்ள அரசியலையும் முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.
“2024 ஆம் ஆண்டின் இறுதியில் நடந்த இரண்டு தேர்தல்களிலும் நாம் யாரை விரட்டி அடித்தோம் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். உலகின் மிகக் கொடூரமான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், கடத்தல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல பெரும் குற்றங்களை உள்ளடக்கிய ஒரு குற்றப் பின்னணி கொண்ட அரசியல் அதிகார வர்க்கத்தையே நாம் எதிர்கொண்டோம். அவற்றை ஒவ்வொன்றாக நாம் அவிழ்க்க வேண்டியிருந்தது. அந்த எதிர்க்கட்சியை நாம் ஏற்கனவே தோற்கடித்துவிட்டோம்.
ஆனால், அரசியல் ரீதியாக அவர்களின் அரசியலை முடிவுக்குக் கொண்டுவர நாம் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயல்பட வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்குள் கௌரவ ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்குப் போட்டியாக யாராவது இருக்கிறார்களா என்று இங்குள்ள யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்? வரவிருக்கும் தலைவரோ, உருவெடுக்கும் தலைவரோ, அல்லது தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) நேருக்கு நேர் போட்டியிடக்கூடிய வேறொரு கட்சியோ அல்லது இயக்கமோ எதிர்காலத்தில் வரவிருக்கும் எந்தவொரு தேர்தலிலும் இருக்கிறதா?
அப்படி யாராவது போட்டியிட வேண்டும் என்றால், என்னைப்போன்ற (அருண ஜயசேகர போன்ற) நல்ல, மேலிருந்து, தேவலோகத்திலிருந்து வந்த ஒரு தனி குழுதான் வர வேண்டும். வேறு யாரும் இல்லை. அந்த அளவுக்கு அவர்களின் அரசியல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. இப்போது நாம் இங்கு எதற்காகக் கூடியிருக்கிறோம்? நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டு, அவர்களின் எஞ்சிய அரசியலையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அவ்வளவுதான்.”
நேற்று (ஜூலை 19) ஹோமாகம பகுதியில் நடைபெற்ற அரசாங்கத்தின் ஓய்வுபெற்ற முப்படை கூட்டமைப்பின் கூட்டத்தில் உரையாற்றியபோதே பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இவ்வாறு தெரிவித்தார்.



