பொலிஸார் எந்தவொரு விசாரணைக்காகவும் பொதுமக்களிடமிருந்து பணத்தை அறவிடுவதில்லை – யாராவது பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தியோ, தங்களைப் பொலிஸ் அதிகாரிகளாகப் போலியாக அடையாளப்படுத்தியோ பண மோசடி செய்யபார்த்தால் 0112 300 756 இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவித்தல் வெளியானது

பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தியும், தங்களைப் பொலிஸ் அதிகாரிகளாகப் போலியாக அடையாளப்படுத்தியும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் முறைப்பாடளிப்பதற்காகப் பொலிஸார் சில தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த மோசடிகள் தொடர்பில் இதற்கு முன்னரான சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், மக்கள் மீண்டும் மீண்டும் இவ்வாறான மோசடிகளில் சிக்குவது அவதானிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கணினிகள் அல்லது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி, பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைக் கொண்ட போலியாகத் தயாரிக்கப்பட்ட வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் கணக்குகள் ஊடாகவே இந்த மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் எந்தவொரு விசாரணைக்காகவும் பொதுமக்களிடமிருந்து பணத்தை அறவிடுவதில்லை என்பதுடன், இவ்வாறான மோசடி நபர்கள் அல்லது குழுக்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கமைய, கணினிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பு அதிகாரிகளின் 071 859 2918, 071 859 1765 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது 0112 300 756 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ இது தொடர்பான முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.


