News

மடவளையில் வாடகைக்கு தங்கும் விடுதியில் சுமார் 4 கிலோ தங்கத்துடன் சிக்கிய கொழும்பு பிரதேச நபர்கள் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகின

கண்டி, வத்தேகம – மடவளை பகுதியில் சுமார் 500 பவுண் தங்க மற்றும் பெருமளவான பணத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிலோ 930 கிராம் மொத்த எடையுடைய கொண்ட 4 தங்கம் பாளங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் ஒரு தங்கம் பாளம் மாத்திரம் சுமார் 1 கிலோ 500 கிராம் எடையைக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவர்களிடமிருந்து 1 கோடியே 69 இலட்சம் ரூபா ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தத் தங்கத் தொகையானது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியிலிருந்து கண்டிக்கு வந்துள்ள குறித்த சந்தேக நபர்கள், மடவளை தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்தபோதே நேற்று (22) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள தங்கத் தொகையை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவே கொண்டு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளின்போது காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.

எனினும், கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணத்துக்கான முறையான உரிமையை நிரூபிக்கும் எந்தவிதமான ஆவணங்களையும் அவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை. தாங்கள் தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்திருந்தாலும், அது தொடர்பிலும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் லலித் பத்தினாயக்க மற்றும் மத்திய மாகாண பிரதி காவல்துறை மாஅதிபர் சுதத் மாசிங்க ஆகியோரின் பணிப்புரையின் பேரில் வத்தேகம காவல்துறையினர் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சந்தேக நபர்களை இன்று (23) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வத்தேகம காவல்துறையினர் தெரிவித்தனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button