News

சுமந்திரனின் கொள்கைக்கும் சம்பிக்க ரணவக்கவின் கொள்கைக்கும் இடையில் சில உடன்பாடுகள் இல்லாமல் இருக்கலாம்… ஆனால், சஜித்தின் அணியில் உள்ளார். நாங்களும் இருக்கின்றோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் நியதிகளின்படி கடன் மறுசீரமைப்பை இன்னும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பூர்த்தி செய்யவில்லை. அடுத்த ஆட்சிக்குவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியினர் தான் இந்தப் பிரச்சினையை முடிக்கவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிண்ணியாவில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது;

நாட்டை மீட்டெடுத்ததாக அவர்
அபாண்டமாக பொய் சொல்கிறார்.

ஏறத்தாழ 100 பில்லியன் டொலர்களை கட்டவேண்டிய கடனை அடுத்துவரும் அரசாங்கத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுமையாக்கி வைத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் முன்னணி வேட்பாளர் என்று
அடையாளப்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க இருப்பார் என்று ஆரம்பத்தில் எதிர்வு கூறப்பட்டது. ஆனால், தற்போது அவர் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

இவர் கடந்த மூன்று ஜனாதிபதி தேர்தல்களிலும் வெல்ல முடியாதென்று ஒதுங்கியவர் அல்லது ஒதுக்கி வைக்கப்பட்டவர். இன்று தன்னை வெற்றி வேட்பாளராக அடையாளப்படுத்திக் கொண்டு எங்களுக்கு மத்தியில் வலிந்து வந்து தேர்தல் கேட்கின்றார்.

தான் வெல்ல முடியாதென்பது தெரிந்தும், சஜித் பிரேமதாசவின் வெற்றியை வாக்குகளைப் பிரித்து எவ்வாறு தடுக்கலாம் என்பதற்காகவே அவர் போட்டியிடுகிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் குறிப்பாக கிழக்கில் அதிகம் கூட்டங்களை நடத்துகின்றார். தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன எடுத்திருக்கும் தீர்மானத்தினால், ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குகளை பிரிக்கும் விடயம் மிகவும் பின்னடைவைக் கண்டுள்ளது.

ரணில் ஜனாதிபதியாக இருந்தும் கடன் மறுசீரமைப்பை சரியாக செய்து முடிக்கவில்லை. தான் நாட்டை மீட்டதாக பொய் சொல்லித் திரிகின்றார்.

சர்வதேச நாணய நிதியம் சொன்ன நியதிகளின்படி கடன் மறுசீரமைப்பை அவர் இன்னும் பூர்த்தி செய்யவில்லை. பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு தனியார் பணமுறிகளை வைத்துக் கொண்டிருக்கின்ற உரிமையாளர்களுடன் உடன்படிக்கை செய்யாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.

எந்தவொரு அனுபவமும் இல்லாத சாகல ரத்நாயக்கவை வைத்துக் கொண்டுதான் அவர் இதனைச் செய்கிறார். சாகல ரத்நாயக்கவால் இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை.

அடுத்து ஆட்சிக்கு வரப்போகும் நாங்கள்தான் இந்தப் பிரச்சினையை செய்து முடிக்கவேண்டும். இன்னும் கடன் மறுசீரமைப்பை ரணில் பூர்த்தி செய்யவில்லை என்பதை மிகத் தெளிவாக சொல்ல வேண்டும்.

நாட்டை மீட்டார் என்பது அபாண்டப் பொய்யாகும். ஏறத்தாழ 100 பில்லியன் டொலர்களை கட்டவேண்டிய கடன் சுமையை அடுத்துவரும் அரசாங்கத்துக்கு ரணில் சுமையாக்கி வைத்துள்ளார்.

அவர் கடன் கட்டுவதற்கு கால அவகாசம் எடுத்துள்ளார். ஆனால், கடனை கட்டி முடிக்கவில்லை. இதேவேளை, இந்தியா நான்கறை மில்லியன் டொலரை கடனாக கொடுத்துள்ளது.

தமிழரசுக் கட்சியும் சஜித்தை ஆதரிப்பதாக சுமந்திரன் சொல்லியுள்ளார். அவரின் கொள்கைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் கொள்கைக்கும் இடையில் சில உடன்பாடுகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், சஜித்தின் அணியில் உள்ளார். நாங்களும் இருக்கின்றோம்.

சென்ற 2015ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை விரட்ட சம்பிக்க ரணவக்க எமது அணியில் இருப்பது நல்லது என்பதற்காகத்தான் அநுரகுமார திஸாநாயக்க அன்று சகித்துக் கொண்டார். இப்போது மட்டும் ஏன் அவரால் சகித்துக்கொள்ள முடியாமல் உள்ளது?

நான் அமைச்சராக இருந்தபோது, துறைமுக அதிகார சபையின் கீழ் பிரிமா ஆலை இருந்தது. இதில் கோதுமை மாவின் சந்தை விலையை குறைப்பதென்றால் போட்டிக்கு இன்னுமொரு நிறுவனத்தை கொண்டு வர வேண்டியிருந்தது. அதன்போது செரண்டிப் நிறுவனம் வந்தது.

செரண்டிப் நிறுவனம் வருவதை தடுப்பதற்காக சிவப்பு சகோதரர்களின் தொழிற்சங்கம் வழக்குப் போட்டது. இதன் பின்னர் செரண்டிப் நிறுவனத்தினிடம் அவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு வழக்கை வாபஸ் பெற்றார்கள் சிவப்பு சகோதரர்கள் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button