சாகரவுக்கு சிக்கல்

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பப்பில் உரையாற்றிய காரியவசம், தற்போதைய பொலிஸ் மா அதிபரை “அரசாங்கத்திற்குப் பதிலாக அரசுக்கும் மக்களுக்கும் சேவை செய்யுமாறு” வலியுறுத்தியதுடன், 37வது பொலிஸ் மா அதிபர் “தெருவில் மக்களால் அடித்துக்கொல்லப்பட்ட ஒரு பொலிஸ் மா அதிபராக வரலாற்றில் இடம்பெறுவதை” தான் விரும்பவில்லை என்றும் உரிமை கோரினார்.
இந்தக் கூற்றுக்கு பதிலளித்த அமைச்சர் விஜேபால, அரசாங்கம் இக்கருத்துக்களை இலகுவாக எடுத்துக்கொள்ளாது என்றும், உடனடியாக விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.
அரசியல் அதிகாரத்திற்காக முன்னர் பொதுமக்களை தியாகம் செய்த ஒரு அரசியல் இயக்கத்தின் மனப்போக்கையே இக்கருத்துக்கள் பிரதிபலிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், இக்கருத்துக்கள் பொறுப்பற்றவை என்றும் விவரித்தார்.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் தனது கடமைகளை திறம்பட செய்து வருவதாக மேலும் தெரிவித்த அமைச்சர், ஊழல், லஞ்சம் மற்றும் பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் காரணமாக பயமடைந்துள்ள நபர்களினாலேயே இக்கூற்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜேபால தெரிவித்தார்.



