News

தமிழ் முஸ்லிம் உறவை சீர்குழைக்க  மொஸாட்டின் சதி வலையில் சிக்கியுள்ளாரா டாக்டர் சுகுணன்?

: சந்தேகம் வெளியிடுகிறார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்



நூருல் ஹுதா உமர்

எமது நாட்டில் தமிழ் முஸ்லிம் உறவை சீர்குழைக்க இஸ்ரேல் மெஸாட்டின் வலையில் மெஸாட்டின் ஏஜெண்டாக டாக்டர் கு.சுகுணன் விழுந்து விட்டாரா? என சந்தேகம் எழுகிறது என உள்ளூராட்சி, மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

சனிக்கிழமை இரவு கல்முனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:

இஸ்ரேலின் மொஸாட் கிழக்கு மாகாணத்தில் பொத்துவிலில் இப்போது பலமாகக் கால் ஊன்றி உள்ளது. மட்டுமில்லாது இலங்கையின் பல நகரங்களில் கால் ஊன்றி உள்ளது. ஏனென்றால் 1985ம் ஆண்டு காலப்பகுதியில் நாங்கள் சிறுவர்களாக கல்முனை கார்மல் பாத்திமா கல்லூரியில் கல்வி கற்ற பொழுது நடந்த சம்பவங்களும், வரலாறும் எங்களுக்கு நினைவில் இருக்கின்றது. எங்களுக்கிருந்த சகோதரத்துவ உறவும், ஐக்கியமும், அந்தப் பரஸ்பர நட்பும் இல்லாமல் செய்ய 1985 இல் மொசாட் முதன் முதலாகச் செய்த வேலை கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களைக் காரைதீவு சந்தியில் பிரித்ததுதான். அன்று ஒருசில சுகுணன் போன்றவர்கள் எடுத்த ஆயுதம் இறுதியாக தமிழ் மக்களுடைய விடுதலை போராட்டத்திற்கே பாரிய சவாலைக் கொண்டு வந்தது. அதை இன்று டாக்டர் சுகுணன் அவர்கள் செய்வதற்காக அந்த வலையில் விழுந்து இதைச் செய்கின்றாரா என்ற சந்தேகம் இருக்கின்றது.

இவற்றுக்கு வழியேற்படுத்தி கொடுக்காது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்றுள்ள முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் தமது மத மற்றும் கலாசார ஆடையுடன் கடமையைப் பொறுப்பேற்க அனுமதிக்கப்படாத விவகாரத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் உடனடியாகத் தலையிட்டு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். கல்முனை பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இந்தச் சர்ச்சை, தமிழ்–முஸ்லிம் ஐக்கியத்தை விரும்புகின்ற அனைவருக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு விரைவாக முற்றுப்புள்ளி வைப்பது இந்தப் பிராந்தியத்தின் அரசியல் தலைமைகளின் முக்கியமான பொறுப்பாகும்.

கல்முனை என்பது பல நூற்றாண்டுகளாக தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் பௌத்த மக்கள் சமாதானமாகவும் புரிந்துணர்வுடனும் வாழ்ந்து வந்த மண்ணாகும். இங்கு அரசியல் உரிமைகள், நிர்வாகம் மற்றும் நில உரிமைகள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் காலத்துக்கு காலம் ஏற்பட்டிருந்தாலும், மதம் மற்றும் கலாசார அடிப்படையில் தமிழ்–முஸ்லிம் மக்களிடையே பாரிய முரண்பாடுகள் ஏற்பட்ட வரலாறு இல்லை.

அந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்பது முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் மத மற்றும் கலாசார அடையாளத்துடன் தொடர்புடைய ஆடையை காரணமாகக் கொண்டு அவர்கள் கடமையைப் பொறுப்பேற்க அனுமதிக்கப்படவில்லை என்ற விடயம் எங்களுக்கு அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை பாதிக்கக்கூடியதாகும். குறிப்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய ஆட்சியில் தமிழ், முஸ்லிம், சிங்கள மற்றும் கிறிஸ்தவ மக்களிடையே மீண்டும் நல்லிணக்கமும் நம்பிக்கையும் உருவாகி வருகின்ற நிலையில், இவ்வாறான ஒரு சிறிய விவகாரம் தேசிய மட்டத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நிலைக்கு செல்லக்கூடாது.

கல்முனை பிராந்தியத்தின் தமிழ் அரசியல் தலைமைகள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, வைத்தியசாலை நிர்வாகம், உள்ளூர் தமிழ் தலைவர்கள், ஆலய நிர்வாகிகள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருடன் கலந்துரையாடி சுமுகமான தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டும்.

நான் கடந்த இரண்டு நாட்களாக தமிழ் அரசியல் தலைமைகளுடன் இது தொடர்பில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடி வருகின்றேன். குறிப்பாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் எம்.பி அவர்களுடனும், தமிழ் அரசு கட்சி தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களுடனும் இந்த விடயம் தொடர்பில் பேசியுள்ளேன். மேலும் பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.

கல்முனை மக்களுக்காக நீதிமன்றங்களில் வாதாடிய தமிழ் அரசியல் தலைவர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் இந்தப் பிரச்சினையையும் ஒரு சமூக நல்லிணக்கப் பிரச்சினையாகக் கருதி முன்வர வேண்டும். வாக்கு வங்கி அரசியலுக்கு அஞ்சாமல், பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் தமிழ்–முஸ்லிம் மத மற்றும் கலாசார ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கு அவர்கள் துணிச்சலுடன் செயற்பட வேண்டும்.

கல்முனையில் ஒரு சமூகத்தின் மத விழாக்களில் மற்றொரு சமூகத்தினர் பங்கேற்பதும், ஒருவருடைய கலாசார நிகழ்வுகளில் மற்றொருவர் கலந்து கொள்வதும் நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றன. கடற்கரைப் பள்ளிவாசல் விழாக்களில் தமிழ் மக்கள் கலந்து கொள்வதும், பாண்டிருப்பு திரொலோபதி அம்மன் ஆலயத் திருவிழாக்களில் முஸ்லிம் மக்கள் பங்கேற்பதும் இப்பிராந்தியத்தின் நல்லிணக்கத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். அத்தகைய மண்ணில் மத மற்றும் கலாசார அடையாளத்தைச் சுற்றிய ஒரு பிரச்சினை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகப் பதியக்கூடாது.

அதேவேளை, இந்த விவகாரத்திற்கு சட்டரீதியான தீர்வைப் பெறுவதற்கான வழிகளும் உள்ளன. அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பான ஏற்பாடுகளை மீறி எந்தவொரு அரச நிறுவனமும் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியாது. இதுதொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத் தீர்ப்புகளும், அரச நிர்வாக வழிகாட்டுதல்களும் காணப்படுகின்றன.

எனவே, சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதற்கு முன்னர், அரசியல் மற்றும் நிர்வாக மட்டத்தில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதே சிறந்த வழியாகும்.

முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் மட்டத்திலும் இந்த விடயத்தை எடுத்துச் செல்ல வேண்டும். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சுகாதார அமைச்சு மட்டத்தில் அவசர கலந்துரையாடலை ஏற்படுத்த வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தை ஒரு தனிப்பட்ட வைத்தியசாலை பிரச்சினையாக மட்டும் பார்க்கக் கூடாது. இது சரியான முறையில் தீர்க்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் சுகாதாரத் துறையிலும் ஏனைய அரச நிறுவனங்களிலும் இதுபோன்ற பிரச்சினைகள் உருவாகக்கூடிய முன்னுதாரணமாக மாறிவிடும்.

எனவே, இந்தப் பிரச்சினையை இனவாத அல்லது மதவாத சக்திகள் பயன்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்காமல், உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

கல்முனையில் பல தசாப்தங்களாகவும் பல தலைமுறைகளாகவும் கட்டியெழுப்பப்பட்டுள்ள தமிழ்–முஸ்லிம் நல்லுறவு ஒரு தனிநபரின் நடவடிக்கையால் பாதிக்கப்படக்கூடாது. தமிழ் தலைமைகள் இந்த விடயத்தில் முன்வந்து தீர்வைப் பெற்றுக்கொடுப்பதே உண்மையான தமிழ்–முஸ்லிம் நல்லிணக்கத்திற்கான சிறந்த செய்தியாக அமையும்.

இந்த விவகாரத்தை அரசியல் மோதலாக மாற்றாமல், இரு சமூகங்களின் மரியாதையையும் மதித்து, ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சு மட்டத்திலும் அவசர நடவடிக்கை எடுத்து, கல்முனை மண்ணின் நீண்டகால இன மற்றும் மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும் எச்.எம்.எம். ஹரீஸ் வலியுறுத்தினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button