அனைவரும் சொந்தமாக ஒரு வாகனத்தை கொள்வனவு செய்யக்கூடிய நிலையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – மத்திய கிழக்கு யுத்தம் முடிவடைந்தவுடன் பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதுடன் வாழ்க்கைத் தரமும் உயர்த்தப்படும் ; அமைச்சர் விஜித ஹேரத்

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சொந்தமாக ஒரு வாகனத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய பின்னணியை உருவாக்குவது அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும், அதற்குத் தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்க அரசாங்கம் தயார் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், பொதுமக்கள் தமது வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கும், அன்றாடத் தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்வதற்கும் ஒரு வாகனத்தைச் சொந்தமாகக் கொண்டிருப்பது முக்கியமானதொரு காரணியாகும் எனச் சுட்டிக்காட்டினார்.
அந்த நிலையை உருவாக்குவதற்காக நாட்டின் பொருளாதார மற்றும் கொள்கை கட்டமைப்பில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வது முற்றாக நிறுத்தப்பட்டிருந்தமையை நினைவுகூர்ந்த அமைச்சர், அரசாங்கம் தலையிட்டு மிகக் குறுகிய காலத்தில் அந்த எல்லைகளை நீக்கி மீண்டும் வாகன இறக்குமதியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்ததாகக் கூறினார்.
தற்போது எந்த வகையான வாகனத்தையும் நாட்டிற்குள் கொண்டுவருவதற்குத் தேவையான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் எதிர்பாராத யுத்த சூழ்நிலை காரணமாக வாகன இறக்குமதி தொடர்பான வரிகளில் சில தற்காலிகக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியேற்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது வெளிப்படுத்தினார்.
எப்படியிருப்பினும், அந்த யுத்த சூழ்நிலை தணிந்தவுடனே அந்தத் தற்காலிகக் கட்டுப்பாடுகளை நீக்கி மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் உறுதி அளித்தார்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் இந்தத் திட்டத்தின் கீழ், எதிர்காலத்தில் வாகனங்களைக் கொள்வனவு செய்வது மேலும் இலகுவாகும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.



