சிறைச்சாலைச் சுவருக்கு வெளியே நின்று பட்டச் சான்றிதழைக் காட்டும் மாணவியும் , உள்ளிருந்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் உருவமும்

சமூக வலைதளங்களில் சமீபகாலமாக ஒரு நெகிழ்ச்சியான வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அதில், பட்டமளிப்பு உடை அணிந்த ஒரு மாணவியின் சிறைச்சாலையின் உயரமான வெளிச்சுவருக்கு அருகில் நின்று, கைகளில் பட்டச் சான்றிதழை உயர்த்திப் பிடிப்பதும், சிறை மதிலுக்குப் பின்னால் இருக்கும் ஒருவர் அதைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு கைகளை அசைப்பதும் பதிவாகியுள்ளது.
இந்தக் காட்சி இணையத்தில் பகிரப்பட்டவுடன், பலரும் இதனை ஒரு மகள் தனது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, சிறையில் இருக்கும் தந்தைக்குத் தனது பட்டச் சான்றிதழைக் காட்டி மகிழும் தருணம் என்று விவரித்தனர்.
இக்கடினமான சூழ்நிலையிலும் கல்வி கற்றுத் தேறிய அந்தப் மாணவியின் விடாமுயற்சியையும், தாண்டி வெளிப்படும் பாசத்தையும் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான இணையவாசிகள் பாராட்டிப் பகிர்ந்து வந்தனர்.
உண்மைப் பின்னணி என்ன?
இச்சம்பவத்தின் உண்மைப் பின்னணி குறித்து ஆராய்ந்தபோது மற்றொரு நெகிழ்ச்சியூட்டும் உண்மை வெளிவந்தது. இச்சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டின் சான்டியாகோ பகுதியில் உள்ள ஒரு சிறை வளாகத்தில் நிகழ்ந்ததாகும். அங்கு சிறை சுவருக்கு வெளியே நின்று கொண்டிருப்பது கல்லூரி மாணவி அல்ல, மாறாக அது 5 வயது நிரம்பிய ஒரு மழலையர் பள்ளி (Kindergarten) சிறுமி ஆவாள்.
அந்தச் சிறுமி தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்தவுடன், சிறையில் தண்டனை அனுபவித்து வரும் தனது தாய்க்குத் தனது சாதனையை நேரில் காட்ட விரும்பியுள்ளாள்.
சிறைச்சாலைக்குள் சென்று முறைப்படி அனுமதி பெற்றுச் சந்திப்பதற்கோ அல்லது அங்கு விழா எடுப்பதற்கோ போதிய வசதி இல்லாததால், அந்தச் மாணவி தனது பட்டமளிப்பு அங்கியுடன் சிறையின் உயரமான வெளிச்சுவருக்கு அருகே வந்து நின்றுள்ளாள்.
தன் மகள் வெளியே நிற்பதை அறிந்த தாய், சிறைச்சாலையின் மேல் தளத்திலுள்ள ஜன்னல் கம்பிகளின் வழியே எட்டிப் பார்த்துத் தன் மகளின் சான்றிதழைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார்.
அங்கு இருந்த ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த நெகிழ்ச்சியான வீடியோ, பின்னர் உலகளவில் பகிரப்படும் போது தந்தை-மகள் கதையாக மாறி வைரலானது. கதையில் சிறிய மாற்றம் இருந்தாலும், தடைகளைத் தாண்டித் தன் பெற்றோருக்குப் பெருமை சேர்க்க நினைத்த அந்தப் பிள்ளையின் தூய்மையான அன்பு ஒட்டுமொத்த இணைய உலகையும் உருக வைத்துள்ளது.



