மன்னார் படுகையில் 2 பில்லியன் பீப்பாய் எண்ணெய் ⛽ 9 டிரில்லியன் கன அடி எரிவாயு பெற 4 நிலப்பகுதிகளுக்கு சர்வதேச உரிமம் வழங்கும் பணி தொடங்கியது.

இலங்கை அரசாங்கம், இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபை (PDASL) மூலமாக மன்னார் கடற்படுக்கையில் அமைந்துள்ள 34,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட நான்கு பிரதான ஆய்வுத் துண்டங்களை சர்வதேச எரிசக்தி நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான 2026 ஆம் ஆண்டின் அனுமதிப்பத்திர சுற்றை (SL2026-01) 2026 ஆகஸ்ட் 25 ஆம் திகதி இன்று அதிகாரபூர்வமாக ஆரம்பித்துள்ளது .
2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் வலுப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை சட்டக் கட்டமைப்போடு, நாட்டின் பெற்றோலிய வளங்களை பொறுப்புடன் மதிப்பீடு செய்து அபிவிருத்தி செய்ய சர்வதேச முதலீட்டாளர்களை இலங்கை வரவேற்கிறது.
மன்னார் கடற்படுக்கையானது இலங்கையின் மேல்நிலை பெற்றோலியத் துறை முதலீடுகளின் மையமாகத் திகழ்கிறது.
100 மீட்டர் முதல் 3,000 மீட்டர் வரையிலான ஆழமான கடற்பகுதியில் பரந்து விரிந்துள்ள
2026-MB-01 (5,948.95 km²),
2026-MB-02 (5,689.05 km²),
2026-MB-03 (10,597.67 km²) மற்றும்
2026-MB-04 (11,728.30 km²)
ஆகிய நான்கு துண்டங்களிலும் இயற்கை வாயு மற்றும் திரவநிலை பெற்றோலிய படிமங்கள் இருப்பது ஏற்கனவே முன்னைய ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விரிவான புவியியல் தரவுகளுடன் கூடிய இந்த இயற்கை வளங்களை முழுமையாக மதிப்பீடு செய்ய சர்வதேச நிறுவனங்களுக்கு இது சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
இத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள எரிசக்தி அமைச்சர் கௌரவ அனுர கருணாதிலக அவர்கள், நாட்டின் இயற்கை வளங்களை பொறுப்பான முறையில் அபிவிருத்தி செய்வதில் இலங்கையுடன் நீண்டகால பங்காளிகளாக இணைந்து பணியாற்ற அனுபவம் வாய்ந்த சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதேபோன்று, PDASL இன் பணிப்பாளர் நாயகம் டொக்டர் நீல் டி சில்வா அவர்கள் பேசுகையில், மன்னார் படுக்கையின் வளமான தரவுகளும் வலுப்படுத்தப்பட்ட நிறுவன கட்டமைப்பும் சர்வதேச ஆய்வாளர்களை ஈர்க்கும் ஒரு புதிய பார்வையை வழங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டம் தொடர்பான கேள்விமனு ஆவணங்கள் ஆகஸ்ட் 25 இன்று முதல் வழங்கப்படுவதுடன், தரவு அறை (Data Room) செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. அத்துடன் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக செப்டம்பர் 29-30 திகதிகளில் லண்டனில் நடைபெறும் உலக எரிசக்தி உச்சி மாநாட்டிலும், ஒக்டோபர் 21 இல் நடைபெறும் பிரத்தியேக மெய்நிகர் (Virtual) கூட்டத்திலும், நவம்பர் 16-17 திகதிகளில் மலேசியாவில் நடைபெறும் ஆசிய பெற்றோலிய புவி விஞ்ஞான மாநாட்டிலும் (APGCE 2026) விழிப்புணர்வு வீதி உலாக்கள் (Roadshows) நடத்தப்படவுள்ளன.
ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் slr2026@pdasl.gov.lk என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, +94 11 233 2002 என்ற தொலைபேசி இலக்கம் மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளமான www.srilankalicensinground.com மூலமாகவோ PDASL குழுவை நேரடியாகத் தொடர்புகொள்ள முடியும்.



