“அன்று எதிர்க்கட்சி எம்.பி.யாக கூறியதை இன்று ஜனாதிபதியாக செய்கிறேன்…” – ஜனாதிபதி
இலங்கை பொலிஸ் சேவையை மிகவும் கௌரவமிக்க சேவையாக மாற்றுவதற்கு முறையான பதவி உயர்வு முறைமை தயாரிக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் புதிய சீருடை வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அனுர කුමාර திசாநாயக்க தெரிவித்தார். அத்துடன், பொலிஸ் அதிகாரிகள் அனைவருக்கும் அபாயக் கொடுப்பனவு (Risk Allowance) வழங்குவதற்கும், தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், மனித வளங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி இச்செய்தியை திம்பிரிகஸ்யாய களப்படை தலைமையகத்தில் (செப்டம்பர் 03) நடைபெற்ற 160வது பொலிஸ் தின நினைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தெரிவித்தார்.
கடந்த 160 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு மோதல்கள், தொற்றுநோய்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பேரழிவுகளை எதிர்கொண்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்காகவும், அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகவும் ஆற்றிய பாரிய பங்களிப்பை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.
வெவ்வேறான காலகட்டங்களில் பல்வேறு பணிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இலங்கை பொலிஸாருக்கு தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ள மிக முக்கியமான பொறுப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றக் கும்பல்களை ஒடுக்கும் தேசியப் பொறுப்பாகும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அதற்காக, தொழில்முறைப் பொறுப்பையும் தாண்டி சமூகப் பொறுப்பாகக் கருதி அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் மிக அதிக அளவிலான போதைப்பொருள் சோதனைகள் மற்றும் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதையும், வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த 74 ஆயுதமேந்திய குற்றவாளிகளை சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கைக்குக் கொண்டு வந்ததையும் பாராட்டிய ஜனாதிபதி, இந்த நாட்டை குற்றங்கள் நிறைந்த நிலையிலிருந்து அமைதியான நாடாக மாற்றுவதற்குத் தேவையான சட்டங்களை இயற்றுவதற்கும் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகபட்சமாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.
160வது பொலிஸ் தின விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு பொலிஸ் மரியாதையுடன் கௌரவமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கான சேவைகளை விரைவாகவும் திறமையாகவும் வழங்குவதற்கும், பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதை முறைப்படுத்துவதற்கும் SRI LANKA POLICE MOBILE APP அறிமுகப்படுத்தப்பட்டதுடன், நவீனமயமாக்கப்பட்ட www.police.lk இணையதளமும் இதன்போது திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை பொலிஸின் 160வது நினைவையொட்டி வெளியிடப்பட்ட நினைவுத் தபால் தலை மற்றும் முதல் நாள் உறை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
2026 ஜனவரி 01 முதல் அமலுக்கு வரும் வகையில், நீண்டகால சேவை அடிப்படையில், பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு கீழுள்ள 1,489 பொலிஸ் அதிகாரிகளுக்கும், பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 153 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வுகளை அடையாளப்படுத்தும் வகையில் பதவி உயர்வு கடிதங்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டமைக்காக இலங்கை பொலிஸின் கௌரவத்தை ஜனாதிபதிக்கு வழங்கி, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க:
“ஒரு நிறுவனத்திற்கு 160 ஆண்டுகள் நிறைவடைவது என்பது நீண்ட வரலாறாகும். அந்த நீண்ட வரலாற்றில் நமது நாட்டில் ஏற்பட்ட பல்வேறு மோதல்கள், இயற்கை அசம்பாவிதங்கள் மற்றும் தொற்றுநோய்கள் போன்ற மனித பேரழிவுகளின் போது, இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்காகவும் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகவும் பாரியதும் பாராட்டத்தக்கதுமான பணியை ஆற்றியுள்ளனர்.
எனவே, இந்த 160 ஆண்டுகளில் இலங்கை பொலிஸ் ஆற்றிய பங்களிப்பு குறித்து நாட்டின் மக்கள் மத்தியில் உங்கள் மீது மரியாதையும், மதிப்பும், நம்பிக்கையும் உள்ளது. உங்களுக்கு கிடைத்துள்ள இந்த மரியாதை, அன்பு மற்றும் நம்பிக்கையைப் பாதுகாத்துக்கொண்டு நீங்கள் எவ்வாறு முன்னோக்கிச் செல்லப் போகிறீர்கள் என்பதே முக்கியம்.
இந்த 160 ஆண்டு கால வரலாற்றைப் பார்க்கும்போது, பொலிஸ் மீது தெளிவான நம்பிக்கை இருக்கும் அதே வேளையில், விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. எனவே, இந்த நேரத்தில் பொலிஸார் எதிர்கொள்ளும் முக்கியப் பொறுப்பு என்னவென்றால், நம்பிக்கையை உறுதிப்படுத்தி, விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளி முன்னோக்கிச் செல்வதாகும்.”



