அதிகளவிலான வர்த்தகர்கள் எமது அரசாங்கத்துடனேயே மிகவும் மகிழ்ச்சியாகப் பணியாற்றுகின்றனர்..- பிமல்
தமது அரசாங்கம் தனியார் வணிகங்களுக்கு எதிரானது எனப் பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவை உண்மையெனில் இந்நேரம் ‘அரலிய அரிசி நிறுவனம்’ (Araliya Rice) அரசாங்கத்தின் கீழ் இயங்கியிருக்க வேண்டும் என்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பெரும்பாலான வணிகர்கள் எவ்வித மனக்கசப்புமின்றி தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுகின்றனர் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நாட்டில் பெருமளவிலான வணிக வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக எந்தவொரு முதலீட்டாளரும் எவ்வித பரிந்துரைகளுமின்றி முதலீடு செய்ய முடியும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
மனம்பிட்டியவிலிருந்து மணல் ஏற்றிச் செல்லப்பட்டதால் வீதியின் ஒரு பகுதி உள்வாங்கியுள்ளதாகவும், அதற்காக புகையிரத சேவையைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
அரலிய நிறுவனத்தின் அதிபர் டட்லி சிறிசேனவின் 350 லட்சம் ரூபாய் நிதிப் பங்களிப்பில் நவீனமயமாக்கப்பட்ட பொலன்னறுவை புகையிரத நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.



