நாமல் ராஜபக்ஷ சிறையிலடைக்கப்பட்டாலும், அடுத்த கிழமை அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் பிரம்மாண்ட மக்கள் பேரணி எவ்வித தடங்கலுமின்றி மிக வெற்றிகரமாக நடத்தப்படும் – நாமலின் கைதை ஜே.வி.பியினர் பட்டாசுகளைக் கொளுத்தி, பேனர்கள், கட்அவுட்களைக் காட்சிப்படுத்தி கொண்டாட தயாராகிறார்கள் – நாங்கள் இருமடங்கு மக்களை அனுராதபுரத்திற்கு அழைத்து வருவோம் ; மொட்டுக்கட்சி பேச்சாளர் அறிவிப்பு

பாரளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாலும், எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரம்மாண்ட மக்கள் பேரணி எவ்வித தடங்கலுமின்றி மிக வெற்றிகரமாக நடத்தப்படும் என அக்கட்சியின் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று (04) முற்பகல் நாமல் ராஜபக்ஷ அவர்கள் லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் ஆஜரான போது, அவ் வளாகத்திற்கு வெளியில் காத்திருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“நாமல் எம்.பி. கைது செய்யப்பட்டால், நாங்கள் இருமடங்கு மக்களை அனுராதபுரத்திற்கு அழைத்து வருவோம். இந்த கைது முயற்சியின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது. இந்த வார இறுதியில் ஜனாதிபதிக்கும் ஒரு கூட்டம் உள்ளது. ஆனால் அவருக்கு மக்களுக்குச் சொல்வதற்கு எதுவும் இல்லை. துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகளை அமைத்ததாகக் சொல்வதா? அல்லது கோதுமை மா, பால் மாவின் விலையைக் குறைத்ததாகக் சொல்வதா? சொல்வதற்கு எதுவும் இல்லாததால் நாமல் ராஜபக்ஷவைக் கைது செய்துவிட்டதாக அன்றைய தினம் கைதட்டச் செய்யவே இவ்வாறு செய்கிறார்கள்” என மிலிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்ட பின்னர் கிராம மட்டத்தில் பட்டாசுகளைக் கொளுத்தி, பேனர்கள் மற்றும் கட்அவுட்களைக் காட்சிப்படுத்தி கொண்டாடுவதற்குத் தயாராக இருக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி தனது ஆதரவாளர்களுக்கு வட்ஸ்அப் செய்திகள் மூலம் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் எழுப்பும் போதும் கட்சி வலுவடையும் போதும் இவ்வாறான அழைப்புகளும் அடக்குமுறைகளும் சாதாரணமானவை என்றும், இவற்றில் எதனாலும் தமது அரசியல் பயணத்தைத் தடுக்க முடியாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.



