News

பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு புதிய வாழ்வாதார வாய்ப்பு

பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு புதிய வாழ்வாதார வாய்ப்பு



முஸ்லிம் எய்டின் தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தித் திட்டம் அங்குரார்ப்பணம் 





இர்ஷாத் இமாமுதீன் 





  கடந்த Ditwah அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட, வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மற்றும் ஸக்காத் பெறுவதற்குத் தகுதியான குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை இடைவிலகிய இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி வாய்ப்புகளை வழங்கி, அவர்களை தன்னிறைவு பெற்றவர்களாக உருவாக்கும் நோக்கில் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்காவின் தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தித் திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.



இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு சனிக்கிழமை (12) கொலன்னாவ மங்கலபாய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.



முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் Skills and Enterprise Development Manager ஜுனூத் முகம்மது சஜித் அவர்களின் நெறிப்படுத்தலில், முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா பணிப்பாளர் AC பைசர்கான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பணிப்பாளர் MFM அர்ஷாட் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். கொடிகாவத்த–கொலன்னாவ பிரதேச சபைத் தவிசாளர் அனுஷ்க பிரியதர்சன கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.



பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை அடையாளம் கண்டு, அவர்களின் ஆர்வம், திறமை மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்ற தொழிற்துறைகளைத் தெரிவுசெய்து, அத்துறைகளில் முறையான தொழிற்பயிற்சிகளை வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.



இதற்காக NVQ உள்ளிட்ட தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தொழில் தகைமைச் சான்றிதழ்களை வழங்கக்கூடிய கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து, தெரிவுசெய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு ஒரு வருட காலப்பகுதியில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.



பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் இளைஞர், யுவதிகளுக்கு அவர்களின் தகைமை மற்றும் திறமைக்கேற்ற தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.



தொழிற்பயிற்சியுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், பயிற்சியாளர்களின் ஆளுமை விருத்தி மற்றும் தனிநபர் மேம்பாட்டிற்கும் இத்திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதன் கீழ் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் (Motivational Programmes), உளவளத்துணை நிகழ்ச்சிகள் (Counselling Programmes), ஆங்கில மொழி மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் Exposure Visits உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.



இதன் மூலம் தொழில்சார் திறன்களுடன் தன்னம்பிக்கை, தலைமைத்துவம், தொடர்பாடல் திறன் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகிய பண்புகளைக் கொண்ட இளைஞர் தலைமுறையை உருவாக்குவதே திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.



400-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி



முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா இதுவரை 400-க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சிகளை வழங்கி, அவர்களை பல்வேறு தொழிற்துறைகளில் இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த வருடம் கொழும்பு மாவட்டத்தில் 85 மாணவர்கள் இத்திட்டத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தங்களது பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் தற்போது பல்வேறு தொழிற்துறைகளில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.



பல்வேறு துறைகளில் தொழிற்பயிற்சிகள்



மாணவர்களின் ஆர்வம், திறமை மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு துறைகளில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.



இதன் கீழ்,



தாதியர் பயிற்சி (Nursing)

தகவல் தொழில்நுட்பம் (Information Technology)

சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய தொழிற்பயிற்சிகள்

Automobile Technology

Auto Electrical

Air Conditioning & Refrigeration / AC Mechanic



உள்ளிட்ட தொழில் சந்தையில் அதிக கேள்வி காணப்படும் பல்வேறு திறன் சார்ந்த பயிற்சி நெறிகள் வழங்கப்படுகின்றன.



கொழும்பு மற்றும் கண்டியில் 85 இளைஞர்கள்



இம்முறை இத்திட்டம் கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மொத்தமாக 85 இளைஞர், யுவதிகள் இத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்டு, தற்போது தங்களுக்குரிய தொழிற்பயிற்சி நெறிகளைத் தொடர்ந்து வருகின்றனர்.



இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்றவர்களாகவும், தங்களது குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் பயனுள்ள பிரஜைகளாகவும் உருவாக்குவதே இத்திட்டத்தின் இறுதி இலக்காகும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button