81 இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றத்தில் சாமர சம்பத்தின் தனிப்பட்ட செயலாளர் இலஞ்சம்,ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது

முன்னாள் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய ஊவா மாகாண சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம்,ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் மூலம் முறையான நடைமுறைகளுக்குப் புறம்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 நிறுவனங்களுக்கு மாத்திரம் பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த சம்பவம் தொடர்பாக, 81 இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட உத்தியோகத்தர்கள் குழு நேற்று (21) பிற்பகல் 4.55 மணியளவிலேயே இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
லங்கா பொஸ்பேட் நிறுவனம் ஊடாக உரிய அரசாங்க விதிகளைப் பின்பற்றாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு மாத்திரம் பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துக்கொடுத்து, அதற்குரிய ஏற்றுமதி உரிமங்களைப் பெற்றுக்கொள்ள உதவியதற்காக அந்த நிறுவனங்களிடமிருந்து இந்தப் பணத்தைக் கோரிப் பெற்றுக் கொண்டார் என்பதே அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சம்பவம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


