புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது சகாக்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் ; ரவூப் ஹக்கீம்
தேர்தலில் இலங்கை மக்கள் தமது திடவுறுதியை வெளிப்படுத்தியுள்ள நிலையில்,புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது சகாக்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு,தேசப்பற்றுடன் ஜனநாயகத்தின் உண்மையான உணர்வோடு இந்த வெற்றியை நாங்கள் நிலைநிறுத்துவோமாக.
நமது தேசத்தின் இதுகாறும் தீர்க்கப்படாத முரண்பாடுகளை நிவர்த்தி செய்யவதற்கான ஒளி இப்போது புதிய அணியினர் ஊடாகப் பாய்ச்சப்படுகின்றது.நாட்டின் அரசியலில் ஒரு புதிய கட்டத்தில் நாம் இருக்கின்றோம், பல சவால்களை எதிர்கொள்வதற்கான திராணியை வளர்த்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டிய இச்சந்தர்ப்பத்தில், பிராந்தியத்துடனும், சர்வதேசத்துடனும் சமாதானத்திற்காக ஒத்துழைக்கும் தோழமையை அனைத்து இலங்கையர்களும் வரிந்து கொள்வோமாக.
இதே வேளையில்,நாம் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் கௌரவ சஜித் பிரேமதாசவுக்கும் மனப்பூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மற்றும் எங்கள் மீது நம்பிக்கை வைத்து, தங்களுடைய காலத்தையும் நேரத்தை அர்ப்பணித்து, பெறுமதியான வாக்குரிமையைப் பயன்படுத்திய சகல சமூகங்களையும் சேர்ந்த அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்