சவூதி அரேபியா – யேமன் மோதல் 🇸🇦 🇾🇪
சவூதியின் பாதுகாப்பு, புவிசார் அரசியல் யதார்த்தமும்

(எழுத்து : வை.அறபாத் )
சவூதி அரேபியா மற்றும் யேமன் விவகாரம் என்பது தற்போதைய மத்திய கிழக்கு அரசியலில் மிக முக்கியமான, அதேவேளை ஆழமான பாதுகாப்பு அக்கறைகளைக் கொண்ட ஒரு சிக்கலான பகுதியாகும். சவூதி அரேபியாவும் யேமனும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீளமான எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நிலையில், குறிப்பாக சவூதியின் தெற்குப் பகுதிகளான அசிர் மற்றும் நஜ்ரான் எல்லைகள் யேமனுடன் மிக நெருக்கமாக அமைந்துள்ளன.
யேமன் நெருக்கடியும் ஹூதிகளின் எழுச்சியும்
யேமனின் வடக்குப் பகுதிகள் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இப்பகுதிகள் சவூதி அரேபியாவின் தேசிய பாதுகாப்புக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன. யேமனில் ஐக்கிய நாடுகள் சபையாலும் சர்வதேச நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரே சட்டப்பூர்வ ஆட்சியாளர்களாக அப்துராப் மன்சூர் ஹாதியின் தலைமையிலான அரசும், அதனைத் தொடர்ந்து உருவான ஜனாதிபதித் தலைமைப் பேரவையும் விளங்குகின்றன.
இத்தகைய சூழலில், யேமனின் வட பகுதியில் உள்ள சாடா மாகாணத்தில் தோன்றிய “அன்சாருல்லாஹ்” எனப்படும் ஹூதி இயக்கத்தினர் படிப்படியாக வலிமை பெற்று, கடந்த 2014-2015 காலப்பகுதியில் தலைநகர் சனாவைக் கைப்பற்றினர். இவர்களுக்குப் பின்னால் பிராந்திய சக்தியான ஈரானின் நேரடி ஆதரவு இருப்பதாகப் பரவலாக நம்பப்படுகிறது. யேமனில் சட்டப்பூர்வ அரசாங்கத்தை வலுக்கட்டாயமாக கவிழ்த்துவிட்டு, ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்கள் தலைநகரைக் கைப்பற்றியதுடன் நிறுத்திக்கொள்ளாமல், சவூதி எல்லையை நோக்கி ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களையும் தொடர்ச்சியாகத் தொடுத்தனர்.
சவூதி அரேபியாவின் இறையாண்மையும் பிராந்தியப் பாதுகாப்பும்
எந்தவொரு இறையாண்மைமிக்க நாடும் தன் நாட்டின் எல்லைகளையும், தன் நாட்டின் குடிமக்களையும், நாட்டின் பொருளாதார மையங்களையும் முழுமையாகப் பாதுகாக்க வேண்டிய அடிப்படைக் கடமையைக் கொண்டுள்ளது. சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மற்றும் தமாம் நகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையங்கள் உள்ளிட்ட மிக முக்கியமான உட்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி தளங்கள் மீதான ஹூதிகளின் ஆளில்லா விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள், சவூதியின் பொருளாதாரத்தையும் பிராந்திய ஸ்திரத்தனையையும் நேரடியாகக் குலைக்கும் தீவிர சீர்குலைவுச் செயல்களாகும். ரியாத் விமான நிலையத்தைத் தாக்குவது என்பது அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு போர்க் குற்றமாகும்.
யேமனில் ஹூதிகள் தங்களது ஆதிக்கத்தை முழுமையாக விரிவுபடுத்தி, அதனைத் தளமாகப் பயன்படுத்தி எதிர்காலத்தில் சவூதி அரேபியாவின் மீதும் நேரடி மற்றும் வீரியமான தாக்குதல்களைத் தொடுத்து நாட்டின் இறையாமைக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்ற யதார்த்தத்தை இராஜதந்திர ரீதியில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அச்சுறுத்தல்கள் விஸ்வரூபம் எடுக்கும் வரை கைகட்டிப் பார்த்துக் கொண்டிராமல், அவற்றை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டிய பாதுகாப்புத் தேவைகள் சவூதி அரசுக்கு காலத்தின் கட்டாயமாகும்.
யேமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சட்டப்பூர்வ ஆட்சியாளர்களை மீண்டும் நிலைநிறுத்துவதும், ஹூதிகளின் விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்துவதும் சவூதியின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, பிராந்திய அமைதிக்கும் மிக அவசியமானதாகும்.
புனிதத் தலங்களின் மாட்சிமையும் உலக முஸ்லிம்களின் உணர்வுகளும்
மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில், அன்சாருல்லாஹ் (ஹூதி) கிளர்ச்சியாளர்கள் ஷியா பிரிவைச் சார்ந்தவர்களாக அறியப்படுகிறார்கள். மறுபுறம், சவூதி அரேபியா சுன்னி இஸ்லாமிய உலகின் முன்னணி நாடாகத் திகழ்கிறது. உலக முஸ்லிம் உம்மத்தின் மிகப் புனிதமான இரு தளங்களான மக்கா மற்றும் மதீனா அமைந்துள்ள இப்பகுதிகளின் மீதும், அதன் உட்கட்டமைப்புகள் மீதும் தொடுக்கப்படும் தாக்குதல்கள் கோடிக்கணக்கான உலக முஸ்லிம்களின் உணர்வுகளை ஆழமாகப் புண்படுத்துவதாகும்.
ஹூதிகளின் தொடர்ச்சியான தாக்குதல்களால், உம்ரா கடமைகளுக்காகச் சென்ற உலகளாவிய இஸ்லாமிய பிரஜைகளும், உள்ளூர் பொதுமக்களும் ஒரு இக்கட்டான மற்றும் பாதுகாப்பற்ற சூழலில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உருவானது. எனவே, இரு புனித தளங்களின் மாட்சிமையையும் பாதுகாப்பையும், கோடிக்கணக்கான முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையையும், நாட்டின் குடிமக்களின் உயிரையும் உறுதி செய்ய வேண்டிய மாபெரும் பொறுப்பு சவூதி அரேபியாவிடமுள்ளது.
இராஜதந்திர அணுகுமுறையின் அவசியம்
தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், சவூதி அரேபியாவின் மீது முன்வைக்கப்படும் மேலோட்டமான விமர்சனங்கள் அந்நாட்டின் இறையாண்மையையும் எதிர்காலப் பாதுகாப்புத் தேவைகளையும் முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் எழுப்பப்படும் வாதங்களேயாகும். எதிர்கால நாட்டு நலன், குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டே சவூதி அரேபியா இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. எந்தவொரு தேசமும் தன் மீது தொடுக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களை வேடிக்க பார்த்துக் கொண்டிருக்க முடியாது; மாறாக, தன் நாட்டின் அமைதியையும் பிராந்தியத்தின் ஸ்திரத்தையுமே நிலைநாட்ட முற்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது முற்றிலும் நியாயமானதே.
எனவே, தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்துவிட்டு, சவூதி அரேபியாவின் பாதுகாப்பு முயற்சிகளுக்கும் யேமனின் சட்டப்பூர்வ அரசாங்கத்தை மீட்டெடுக்கும் கூட்டு முயற்சிகளுக்கும் உலக நாடுகள் துணை நிற்பதுடன், பிராந்திய அமைதிக்காக ஒன்றிணைந்து கைகோர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். வல்ல இறைவன் சவூதி அரேபியாவையும் அதன் புனித தளங்களையும் பிராந்தியத்தையும் பாதுகாத்து, அதன் எதிர்காலத்தை அமைதியானதாகவும் வளமானதாகவும் ஆக்கி வைக்க வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையாகவும் இருக்க வேண்டும்.



