News

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த துறவிகள் மீது பொலிஸார் எடுக்கும் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறேன் – சஜித் அறிவிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த துறவிகள் மீது பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையைக் கண்டித்துள்ளதுடன், அவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


கண்டியிலிருந்து கொழும்பு வரை பேரணியாக வந்த பௌத்த துறவிகள், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக பிரேமதாச தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


பௌத்த துறவிகளால் கொண்டுவரப்பட்ட புத்தர் சிலைக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நிழற்பந்தலை பொலிஸார் அகற்றியதாகவும், இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மிகுந்த மனவேதனையடைந்ததாகவும் தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.


மேலும், இந்தச் சம்பவத்தின் போது சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த துறவிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஜனநாயகத்திற்குப் புறம்பான இந்த நடவடிக்கைகளை எதிர்க்கட்சித் தலைவர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.


மகா சங்கத்தினருடன் ஜனாதிபதி நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, பௌத்த துறவிகளின் காவி உடைக்கு உரிய மதிப்பளித்து அவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், பௌத்த துறவிகளுக்கு இடையூறையோ அல்லது மனவேதனையையோ ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கமும் பொலிஸாரும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button