போதைப்பொருள் குற்றச்சாட்டில் ஹோமாகம பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்ட 29 வயது இளைஞன் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிப்பு

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக ஹோமாகம பொலிஸ் அதிகாரிகளால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அவருடைய உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் முனமலவத்தை, கிரிவத்துடுவை பகுதியைச் சேர்ந்த 29 வயதான இஷார ஹர்ஷ குமார என்ற ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
கைது செய்யப்பட்ட இளைஞரைப் பார்ப்பதற்காக அவருடைய உறவினர்கள் சிலர் ஹோமாகம தலைமையக பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்தனர். அப்போது, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த இளைஞரை நான்கு பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் தூக்கி வந்ததாகவும், பொலிஸ் அதிகாரிகள் தாக்கியதாலேயே இந்த இளைஞர் உயிரிழந்தார் என்றும் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த அந்த இளைஞரை, உறவினர்களின் கோரிக்கைக்கு அமைய ஹோமாகம பொலிஸார் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்த போதிலும், அதற்கு முன்னரே அவர் உயிரிழந்திருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, உயிரிழந்த தங்கள் உறவினருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்கி தருமாறு அவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பதற்றமான முறையில் நடந்துகொண்டதால், சுற்றியுள்ள பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகளும் வைத்தியசாலை வளாகத்திற்கு அழைக்கப்பட்டு பொலிஸாரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இது குறித்து பொலிஸாரிடம் கேட்டபோது, இந்த குற்றச்சாட்டை மறுப்பதாகவும், உதவி பொலிஸ் அத்தியாட்சகர் ஒருவரின் கீழ் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் ஹோமாகம பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


