News

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க  நாட்டு மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஒரு வளமான நாட்டை நிச்சயமாகப் பெற்றுக் கொடுப்பார் ; அபூபக்கர் பர்ஹான்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க  நாட்டு மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஒரு வளமான நாட்டை நிச்சயமாகப் பெற்றுக் கொடுப்பார் – காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் அபூபக்கர் பர்ஹான் 


பாறுக் ஷிஹான்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையிலான இந்த மக்கள் அரசாங்கம் மக்களின் ஆட்சி என்பதால் மக்களின் பலத்தினாலேயே தவிர வேறு எவராலும் இதனை வீழ்த்த முடியாது என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் அபூபக்கர் பர்ஹான் குறிப்பிட்டார்.


அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது முகத்துவார (Lagoon) அண்டிய பிரதேசத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்யும் முகமாக, 10 மில்லியன் (ஒரு கோடி) ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சாய்ந்தமருதில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் அபூபக்கர் பர்ஹான்  அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்துப் பல முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.

பிரதேச சபை உறுப்பினர் அபூபக்கர் பர்ஹான்  கருத்து தெரிவிக்கையில்

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற போது, இது இரண்டு மாதங்களில், நான்கு மாதங்களில் அல்லது ஒரு வருடத்தில் கவிழ்ந்துவிடும் என்றும், இவர்களுக்கு நிதி நிலைமைகளைக் கையாளும் பக்குவம் இல்லை என்றும் எதிர்க்கட்சியினர் கிளிஜோசியம் கூறினர். ஆனால், அத்தகைய கேலிக்கைகளுக்கு மத்தியில் மிகச் சிறப்பான முறையில் இந்த ஆட்சி தனது இரண்டு வருடங்களைக் கம்பீரமாகக் கடந்துள்ளது” என அவர் தெரிவித்தார்.

எங்கு பார்த்தாலும் மக்களுக்கான பணிகள் இடைவிடாது நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், பிரஜா சக்தி ஊடாக மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுவதுடன், காபட் மற்றும் கொங்கிறீட் வீதிகள், வீட்டுத் திட்டங்கள் எனப் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.

மக்களின் அத்தியாவசியத் தேவைகளையும் தாண்டி, மக்களின் சிந்தனைக்கு ஏற்ப அவர்கள் இளைப்பாறுவதற்காகக் கடலோரப் பிரதேசமான சாய்ந்தமருது முகத்துவாரப் பகுதியை நவீன முறையில் மேம்படுத்தும் நோக்கில் 1 கோடி ரூபா செலவில் இப்புதிய அபிவிருத்தித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் வழிகாட்டலில் கரையோரப் பிரதேசங்களின் ஒவ்வொரு மூலையிலும் தொடர்ச்சியான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையிலான இந்த மக்கள் அரசாங்கம், நாட்டு மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஒரு வளமான நாட்டை நிச்சயமாகப் பெற்றுக்கொடுக்கும் என்பதில் ஐயமில்லை . மேலும், இந்த ஆட்சியை மழுங்கடிக்கச் சில புதிய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டாலும், இது மக்களின் ஆட்சி என்பதால் மக்களின் பலத்தினாலேயே தவிர வேறு எவராலும் இதனை வீழ்த்த முடியாது எனவும் அவர் எச்சரித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button