News

பாகிஸ்தானின் Tik Tok பிரபலம் அன்சார் ஜாட்டின் திருமண விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம் – முஹம்மது அகீல் என்பவர் என்ற இளைஞர் உயிரிழப்பு

பாக்கிஸ்தானின் சியால்கோட் நகரில் பிரபல டிக்டாக் (TikTok) பிரபலம் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த திருமண விழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் ‘மிஸ்டர் பட்லோ’ (Mr Pattlo) என அறியப்படும் முஹம்மது அன்சார் ஜாட் என்பவரது மெஹந்தி சடங்கின் போதே, தஸ்கா வீதியில் உள்ள ஃபராஸ் கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கப்படும் என்ற அறிவிப்பையடுத்து, அங்கு பெருந்திரளான மக்கள் கூடினர். மைதானத்தின் வாயில்களை அமைப்பாளர்கள் திறந்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிலர் கீழே விழுந்து மிதிக்கப்பட்டனர்.


பாக்கிஸ்தான் ஊடக அறிக்கைகளின்படி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் 30 வயதான முஹம்மது அகீல் என்பவர் உயிரிழந்தார்.

காயமடைந்தவர்களை மீட்புக் குழுவினர் சிகிச்சைக்காக அல்லாமா இக்பால் நினைவு கற்பித்தல் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் முதலுதவி சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியதாகவும், சிலர் தொடர்ந்து மருத்துவச் சிகிச்சையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரம்பகட்ட அறிக்கைகளில் 14 பேர் காயமடைந்ததாகக் கூறப்பட்ட போதிலும், 18 பேர் காயமடைந்ததாகப் பொலிஸ் அறிக்கைகளை மேற்கோள்காட்டி ஏனைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் அனுமதிப் பத்திர நிபந்தனைகளை மீறியதாகக் கூறி, குறித்த டிக்டாக் பிரபலம் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் உட்பட பெயரிடப்பட்ட 9 நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாத 40 முதல் 45 பேருக்கு எதிராகப் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button