கேஸ் சிலிண்டர்களை பதுக்க வேண்டாம்

எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கி வைத்தல், விற்பனையைக் கட்டுப்படுத்துதல், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் அனுமதியற்ற மேலதிக கட்டணங்களை அறவிடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அங்கீகரிக்கப்பட்ட அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் லிட்ரோ நிறுவனம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனது விநியோக வலையமைப்புக்கு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் மூலம் நிறுவனம் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இந்த உத்தரவுகளைப் புறக்கணிக்கும் அல்லது மீறும் விநியோகஸ்தர்களுக்கு எதிராகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவனம் எச்சரித்துள்ளது.
தேவை ஏற்படின், விதிமுறைகளை மீறும் விநியோகஸ்தர்களுடனான விநியோக ஒப்பந்தங்கள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் எவ்வித தடையுமின்றி, உத்தியோகபூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன.


