வென்றெடுத்த அதிகாரத்தை மீண்டும் யாரிடமும் கொடுக்க மாட்டோம்.. இனிமேலும் நாங்கள்தான் ஆட்சியிலிருப்போம் – லால் காந்த

மக்கள் போராடி வென்றெடுத்த அரசியல் அதிகாரத்தை எந்தக் காரணத்திற்காகவும் மீண்டும் யாருக்கும் வழங்கப் போவதில்லை என்றும், எதிர்வரும் பல ஆண்டுகள் கடந்த பின்னரும் மீண்டும் ஆட்சிக்கு வரப்போவது தங்களது அரசாங்கமே என்றும் விவசாயம், கால்நடை வளர்ப்பு, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற தொழிற்சங்க தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தற்பொழுது நாட்டின் அரசியல் புதிய திருப்புமுனையை எட்டியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கான போராட்டம் இப்போதைக்கு முடிவுக்கு வந்துவிட்டதாகவும், தற்போதைய உண்மையான சவாலானது வென்றெடுத்த அதிகாரத்தைப் பாதுகாத்து அதனை மேலும் வளர்த்து முன்னோக்கிச் செல்வதே என்றும் கூறினார்.
“நாம் தற்பொழுது அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற கட்டத்தில் இல்லை. வென்றெடுத்த அந்த அரசியல் அதிகாரத்தைப் பாதுகாக்க வேண்டும், மேம்படுத்த வேண்டும். இந்த அதிகாரத்தை நாம் மீண்டும் கொடுக்கப் போவதில்லை. இந்தக்காலம் கடந்த பின்னரும் நாங்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்” என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பெருந்திரளான மக்கள் கூட்டத்தின் மூலமும் இந்த யதார்த்தம் உறுதிப்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வென்றெடுத்த இந்த அரசியல் அதிகாரத்தை யாரிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய லால் காந்த, உழைக்கும் வர்க்கத்திற்குத் துரோகம் இழைக்கும் துரோகிகளிடமிருந்து இந்த அதிகாரத்தைப் பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும் என்றும் மேலும் வலியுறுத்தினார்.



