Laughfs Gas விலை உயர்வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது – நுகர்வோர் விவகார அதிகார சபை

Laughfs நிறுவனம் தனது வீட்டு உபயோக எரிவாயு (Gas) விலையை பெருமளவில் உயர்த்தியுள்ளமை தொடர்பாக விளக்கமளிக்குமாறு அதன் அதிகாரிகளை அழைத்திருந்த போதிலும், அதற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ‘தி டெய்லி மோர்னிங்’ (The Daily Morning) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வீட்டு உபயோக எரிவாயுவை மீண்டும் அதிகபட்ச சில்லறை விலைக் கட்டுப்பாட்டு கட்டமைப்புக்குள் கொண்டுவரும் வரை இதுபோன்ற விலை மாற்றங்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘தி டெய்லி மோர்னிங்’ பத்திரிகைக்கு கருத்து தெரிவித்துள்ள நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.கே. கருணாரத்ன, சந்தையில் எரிவாயு தடையின்றி விநியோகப்படுவதையும், அது கிடைப்பதையும் உறுதி செய்வது தொடர்பாக மட்டுமே அதிகாரசபையால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர, விலை அதிகரிப்புகள் தொடர்பாக எடுக்க முடியாது என்று தெரிவித்தார்.
விலை திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு முன்னர் நிறுவனங்கள் அது குறித்து அதிகார சபைக்கு அறிவிக்கக் கடமைப்பட்டிருந்தாலும், அந்த விலையேற்றத்தை நிறுத்தவோ அல்லது அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவோ அதிகார சபைக்கு அதிகாரம் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
அதிகார சபைக்கு செய்யக்கூடியதெல்லாம் குறித்த விலை அதிகரிப்பு நியாயமானதா இல்லையா என்பது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்துவது மட்டுமே எனத் தெரிவித்த பணிப்பாளர் நாயகம், நுகர்வோருக்குப் போதுமான அளவு இருப்புகளைப் பேணிப் பராமரிக்கத் தவறியமையால் இதற்கு முன்னர் லாஃப்ස් நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.
ஏதேனும் ஒரு பொருள் அதிகபட்ச சில்லறை விலையைக் கொண்ட அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் உள்ள சந்தர்ப்பத்தில் மட்டுமே, அது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என நுகர்வோர் அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் மேலும் விளக்கமளித்தார். எவ்வாறாயினும், கடந்த 2023 ஆம் ஆண்டில் வீட்டு உபயோக எரிவாயு அந்த அதிகபட்ச சில்லறை விலை கட்டுப்பாட்டுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால், நிறுவனங்கள் விலையை உயர்த்தும்போது அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லை.
எவ்வாறாயினும், மேற்கொள்ளப்பட்டுள்ள விலை அதிகரிப்பு தொடர்பில் விளக்கம் அளிப்பதற்காக லாஃப்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகளை இன்று (16) அதிகார சபை முன்னிலையில் அழைத்துள்ளனர்.
கடந்த நவம்பர் 13ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலாகும் வகையில் லாஃப்ஸ் நிறுவனம் தனது விலைகளை கணிசமாக உயர்த்தியது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 6,740 ரூபாவாகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 732 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 2,720 ரூபாவாகவும் திருத்தப்பட்டது. உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பு, கப்பல் கட்டணங்கள் மற்றும் காப்பீட்டுச் செலவுகள் அதிகரிப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் இறக்குமதிச் செலவுகளை ஈடுகட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


